தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசு - தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.
இதற்காக தனியார் புதிய பள்ளிகளை தொடங்கலாம். அல்லது தற்போதைய பள்ளிகளையே மாதிரி பள்ளிகளாக மாற்றிக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிக்காக மொத்த செலவில் 25 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும்.
அரசு ஒதுக்கீடு
பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களில் 40% பேர் அரசால் ஸ்பான்சர் செய்யப்படுவர். எஞ்சிய 60% பேர் பள்ளி நிர்வாகத்தால் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே பள்ளிக்கு செலுத்திவிடும். நிர்வாகப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம்தான் சம்பளம் வழங்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட இந்த மாதிரிப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல் செயல்படும். இப்பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். மாதிரிப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் 25 சதவீத மானிய உதவி 10 ஆண்டுகளுக்கு கிடைக்கும். அதன்பிறகு அந்தந்த மாநில அரசுகள் உதவிசெய்ய வேண்டும்.
356 பள்ளிகள்
நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ள 2,500 மாதிரிப் பள்ளிகளில் தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்காக கல்வியில் பின்தங்கிய பகுதி அல்லாத இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர், அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரியமேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, தி.நகர், பெரம்பூர் ஆகிய 9 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
மாதிரிப் பள்ளிகள் தொடங்க விரும்பும் அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் நிர்வாகங்கள் போன்றோரிடம் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே விண்ணப்பங்களை பெற்றுவிட்டது. மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தகவல் அனுப்பியிருக்கிறது. இதுவரை தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாதிரிப் பள்ளிகள் தொடங்க நிச்சயம் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகள் பாதிக்கும்
சாதாரணமாகவே தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களின் பெற்றோர் படையெடுப்பது வழக்கம். ஆங்கில மோகம்தான் அதற்கு காரணம். தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பக்கமும் பல பெற்றோரின் பார்வை திரும்பியிருக்கிறது. இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வசதியுடன் இலவசமாக படிக்கக்கூடிய வாய்ப்புடன் மாதிரி பள்ளிகள் வரும்பட்சத்தில் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்கவே ஆசைப்படுவார்கள். இதனால். அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
வேண்டுகோள்
மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுவது குறித்து பொதுப் பள்ளிமுறைக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “மத்திய அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் உருவாகும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக தனது ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக தனியாருக்கு மத்திய அரசு வழங்கும் 25 சதவீத மானியத்தொகையை தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அதை இங்குள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக ்கொள்ளலாம். மாதிரி பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும்” என்று குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment