Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 16 July 2014

பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: அக்டோபர் 26-ஆம் தேதி எழுத்துத் தேர்வு

அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்காக அக்டோபர் 26-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 அரசுப் பொறியியல் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ., கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 139 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன.
 இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் ரூ.100 செலுத்தி இந்த விண்ணப்பங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
 பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 5 ஆகும். விண்ணப்பங்களை வாங்கிய அதே அலுவலகங்களில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களையும் நேரில் சமர்ப்பித்து அதற்கான ஒப்புகைச் சான்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரடியாக அனுப்பக் கூடாது.
 கல்வித் தகுதி:
 பொறியியல் உதவிப் பேராசிரியர்கள்: சம்பந்தப்பட்ட துறைகளில் பி.இ., அல்லது பி.டெக். மற்றும் எம்.இ. அல்லது எம்.டெக். படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
 பொறியியல் அல்லாத துறைகளுக்கான பேராசிரியர்கள் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்): சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டப் படிப்பில் 55 சதவீதத்துக்கும் குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி பட்டம் பெற்றவர்களுக்கு நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு வழங்கப்படுகிறது.
 தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் விதிகளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 1, 2014-ஆம் தேதியின் படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments: