ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசைப் பட்டியலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதனுடன் பல்வேறு சமூகப் பிரிவினருக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகையில் இந்தப் பட்டியல் ஒட்டப்பட்டிருப்பதோடு,www.tndalu.ac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனுடன் பல்வேறு சமூகப் பிரிவினருக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒசி (89.875), பிசி (81.250), பிசிஎம் (77.000), எம்.பி.சி. (79.875), எஸ்.சி. (79.378), எஸ்.சி.ஏ. (79.375), எஸ்.டி. (65.875) ஆகும்.
மூன்றாண்டு படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து நிறுத்தம்: சட்டப் படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு சர்ச்சை காரணமாக, இம்முறை சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தாமதமானது.
இந்த நிலையில், மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கியும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை 21 ஆக உயர்த்தியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிலையில், வயது உச்ச வரம்பு தளர்வுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 18 ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. இதனால், மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நிறுத்தப்பட்டது. இப்போது மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்ட போதும், விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதனால், நிகழாண்டில் மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தாமதமாகும் என்பதோடு, வகுப்புகள் தொடங்குவதும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment