Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 1 July 2015

ஆசிரியர் டிப்ளமோ: இணையவழி கலந்தாய்வு இன்று தொடக்கம்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) முதல் நடைபெற உள்ளது.
இதற்கான இணையவழி கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாய்வில் 2,759 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் உள்ளன. 
எனவே, கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் படிப்பில் சேருவதற்காக பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியரின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான இடம், நாள், நேரம் அடங்கிய அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சிப் பெற்றதற்கான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்ற சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகிய அசல் சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும்.
மாணவர்கள் கலந்தாய்வு மையத்துக்கு அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும்.
கலந்தாய்வு காலை 9 மணிக்குத் தொடங்கும்.
தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு நடைபெறும் இடம் அனைத்தும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணையதளமான www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
அட்டவணை விவரம்:-
ஜூலை 1 - புதன்கிழமை - ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவிகள், தெலுங்கு, உருது மொழிகளில் பயில விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவ, மாணவிகள், சிறப்புப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்), தொழில் பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்கள்.
ஜூலை 2 - வியாழக்கிழமை - தொழிற்பிரிவு மாணவிகள், கலைப்பிரிவு மாணவிகள்.
ஜூலை 3, 4 - வெள்ளி, சனிக்கிழமை - அறிவியல் பிரிவு மாணவிகள்.

No comments: