Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 17 June 2015

ஆய்வக உதவியாளர் நியமனம்: அரசு விளக்கம்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம் தகுதிகாண் மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பி.சதீஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ஆய்வக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகிதத்தின் அடிப்படையிலும், நேர்காணலின்போது பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணியிடம் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செய்யும் முறையில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன. இது சட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்தத் தேர்வு நடைமுறை அரசு வெளியிட்ட முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது.
இந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எனவே, பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரினார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆய்வக உதவியாளர் பணி நியமனம், நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண், தகுதிகாண் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தகுந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments: