முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்று நவீன ஆராய்ச்சி உத்திகளையும், தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வதற்காக இளம் பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.
இந்திய ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாகும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர், 2015 ஜூன் 1 ஆம் தேதியன்று 40 வயதை மிகாதவராகவும், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பணிபுரியும் நிரந்தர பேராசிரியராகவும் இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் அல்லது டீன் அல்லது கல்லூரி முதல்வர்கள் மூலம் மட்டுமே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பேராசிரியர் முதுநிலை பட்டப் படிப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஆராய்ச்சி படிப்பையும் (பிஎச்.டி.) முடித்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு அதிகபட்சம் 12 மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அங்குள்ள கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, நவீன ஆராய்ச்சி உத்திகள், தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்காக மாதம் ரூ. 1.80 லட்சம் ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment