தமிழகத்தில் வேளாண்மைப் படிப்புகளில் சேர 29,825 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 6 படிப்புகளும், இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் உயிர்த் தொழில்நுட்பவியல், உயிர்த் தகவலியல் உள்ளிட்ட 7 படிப்புகளும் உள்ளன.
இளம் அறிவியல் பிரிவில், உறுப்புக் கல்லூரிகளில் 915 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 1,080 இடங்களும், இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் 305 இடங்களும் என மொத்தம் 2,300 இடங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 15-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 13-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூன் 13-ஆம் தேதி வரை 33,910 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. அதில், 29,825 பேர் படிவங்களை பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 2,000 குறைவாகும்.
இதற்கிடையே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியவர்கள் அதில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ள செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மாலை வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
ஜூன் 27-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
பொதுப் பிரிவினருக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூன் 29 முதல், ஜூலை 11 வரையும், 2-ஆம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 15 முதல் 17-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment