தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டத்தின் கீழ் (என்.பி.டி.இ.எல்.) புதிதாக 24 இணைய வழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, இந்தத் திட்டத்தின் மூலம் 30 படிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். இப்போது 28 சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து என்.பி.டி.இ.எல். ஒருங்கிணைப்பாளரும் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருமான பிரதாப் ஹரிதாஸ் வெளியிட்ட செய்தி:
மாணவர்கள் தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடையும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ், ஏழு ஐ.ஐ.டி.க்களும் சேர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
இந்த இணைய வழி படிப்பை முடிப்பவர்களுக்கு என்.பி.டி.இ.எல், ஐ.ஐ.டி. ஆகிய இரண்டு நிறுவனங்கள் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இதுவரை 30 படிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். இப்போது 28 இணைய வழி படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோஸ்பேஸ், எலெக்ட்ரிக்கல், மேலாண்மை அறிவியல் ஆகிய துறைகளின் கீழ் கூடுதலாக 24 இணைய வழி படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் https:onlinecourses.nptel.ac.in என்ற இணையதளம் மூலம் இந்தப் படிப்பில் சேர்ந்துகொள்ள முடியும். இதில் உள்ள பாடங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகவே படித்துப் பயன்பெற முடியும். சான்றிதழ் பெற விரும்புபவர்கள் மட்டும், தேர்வுக்கான குறைந்த அளவிலான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். வருகிற செப்டம்பர், நவம்பர் மாதங்களில் இதற்கான தேர்வுகள் நடத்தப்படும். கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, படிப்பை முடித்து பணியில் இருப்பவர்களுக்கும் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள விடியோ பாட கற்பிப்பு வகுப்புகள், விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment