முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், காலியாக உள்ள 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாதம் 7ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஜன., 10ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, இம்மாதம் 10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
26ம் தேதி மாலை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பங்களை ஆயிரக்கணக்கானோர் பெற்று, பூர்த்திசெய்து சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதுநிலை பட்ட மேற்படிப்புடன், பி.எட்., படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், முதுநிலை படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, இணையான கல்வித் தகுதிகள் எவை எவை என்ற தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக தெரிவிக்கவில்லை என, முதுநிலை கல்வி படித்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: இணையான கல்வித்தகுதி உள்ள பட்டப் படிப்பு என்ன என்பதே, எங்களுக்கு தெரியாமல் உள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடவில்லை. அதனால், குழப்பம் நீடிக்கிறது. நாங்கள் பல்வேறு நிலையில் குழம்பி, முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகும்போது, சரியான பதில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்வுக்கு, கல்வித்தகுதி பெற்றிருக்கிறோமா என தெரியாமலேயே, விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளித்து வருகிறோம்.
அறிவிப்பு வெளியிடும்போதே, தேர்வுக்கு இணையான படிப்புகள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், எங்களுக்கு விண்ணப்ப படிவத்திற்கான பணம் வீணாகுமோ என்ற கவலையுடனே விண்ணப்பித்துள்ளோம். எனவே, உடனடியாக முதுநிலை ஆசிரியர் தேர்விற்கு, இணையான கல்வி தகுதி என்ன என்ற அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment