Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 14 August 2014

அரசுப் பள்ளிகளில் முழுநேர கணினி ஆசிரியர் இல்லாததால் பாடத்தில் ஆர்வம் குறையும் அபாயம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கு கணினிக் கல்வியில் ஆர்வம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் கணினி கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு கணினிக் கல்வியை மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாகக் கொண்டுவந்தது. முதலில் தமிழக அரசின் எல்காட் மூலமாக தனியார் கணினி பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்து, பள்ளிகளுக்கு கணினிப் பாட ஆசிரியர்கள், 10-க்கும் மேற்பட்ட கணினி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை 15 வருட ஒப்பந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்பு, ஒப்பந்தம் முடிந்த தறுவாயில் 2008 ஆம் ஆண்டின்போது தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பணிபுரிந்த அனைவருக்கும் தகுதித் தேர்வு வைத்து, அதில் தேர்வானவர்களை அரசுச் சம்பளத்தில் பணியமர்த்தியது. அதனிடையே, ஒருசிலரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்தது. ஆனால், அதன் பின்னர் முழுநேர ஆசிரியராக அரசின் மூலம் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும்தான் கணினிப் பாடத்துக்கென்று நிரந்தரமான ஆசிரியர் உள்ளார். மற்ற பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியின் மூலமும், சில பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலமும் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இதில் உள்ள பிரச்னை என்னவென்றால், அரசு வகுத்துள்ள விதியின்படி சிறப்பு ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் என 12 நாள்கள்தான் பணிக் காலமாகும்.
மேலும், அவர்கள் அரசின் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கணினிப் பாடம் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டவர்கள். அவர்களால், அவர்களுக்கு இருக்கும் குறுகிய நேரத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பாடத்தை முடிக்க முடியாமல் போகிறது. மீதி நாள்களில் மாணவர்களை வழிநடத்த சரியான அதே துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் இல்லை.
இதற்காக ஒருசில பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் தாற்காலிகமாக ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் முழு நேரம் பணியில் உள்ளனர். ஆனால், இதில் மாணவர்களால் கொடுக்கப்படும் பணத்தின் மூலம்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது.
இதனால் மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படுகிறது, மேலும், மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் போதிய பணம் வசூலாவதில்லை.
இதனால் பகுதிநேர பாடமாகி விட்டது போன்ற தோற்றத்தை கணினித் துறை ஏற்படுத்துகிறது. எங்கும் கணினிமயமாகி விட்ட நிலையில் அரசுப் பள்ளிகளில் இப்படிப்பட்ட நிலை நீடிப்பது, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
மேலும், 2013 ஆம் வருடம் தகுதித் தேர்வின் மூலம் நீக்கப்பட்டவர்கள் 15 வருடம் காலம் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். அவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் அல்லது மீண்டும் தேர்வு வைத்து முழு நேர கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அரசு இந்த விஷயத்தில் ஓர் உறுதியான நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்

No comments: