Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 14 August 2014

1,367 முதுகலை மற்றும் 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம்: அமைச்சர் வீரமணி தகவல்

திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது.
கூட்டத்திற்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி துறை முதன்மைச் செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பேசியதாவது:

கல்விக்காக அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் முதல்வர் செய்து வருகிறார். குறிப்பாக, கட்டணமில்லா கல்வி, விலையில்லா மடிக் கணினி, புத்தகம், பை, வண்ண கிரையான்கள், சீருடை, பேருந்து பயண அட்டை, உயர் கல்விக்கு ஊக்கத் தொகை என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு முழுமையான கல்வி வழங்க கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், நல்ல தேர்ச்சி விழுக்காடு இருந்தது. எனினும், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் சற்று பின்னடைவைச் சந்தித்தன. இந்நிலையை மாற்றிட சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விழுக்காட்டை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசு 53,218 ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும், 1,367 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளையும் புதிதாக ஐந்து பகுதிநேர நூலகங்கள் திறப்பதற்கான ஆணைகளையும், சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகளையும் அமைச்சர் வீரமணி வழங்கினார்.
இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை மற்றும் பள்ளிக் கல்வி துறை அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments: