Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 12 August 2014

வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் விரைவில் 650 பணியாளர் தேர்வு குறித்த அறிவிப்பு!

முதல்வர் அறிவித்துள்ளதால், விரைவில் வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம், 650 பணியாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.
வன பணியாளர் தேர்வு குழுமம்: சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ், வனத்துறை மற்றும் அதைச் சார்ந்த மூன்று வனக் கழகங்களில், வனவர், வனக் காப்பாளர் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய, வனக் காப்பாளர் மற்றும் வனக் காவலர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 650 காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், நேரடி நியமனம் மூலம் நடப்பாண்டில் நிரப்பப்படும்.

முதன்முறையாக, வனத் துறையில் இப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் மகளிரும் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன்மூலம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவிப்பு மற்றும் குழுமம் அமைக்கப்பட்ட நிலையில் இருந்த தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம், செயல்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
கடந்த 2012 மே 15ம் தேதி சட்டசபையில் வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அமைப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
தொடர்ந்து கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதற்கான அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இருப்பினும் பணியாளர்கள் நியமனம் குறித்த எந்த அறிவிப்பையும் இந்த குழுமம் வெளியிடவில்லை. காலிப்பணியிடங்களில் 25 சதவீதத்தை பழைய முறைப்படி வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கவும் உத்தரவிடப்பட்டது. அந்த முறையிலும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் தற்போது தேர்வுக் குழுமம் மூலமே 650 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆட்கள் பற்றாக்குறையால் பணிச்சுமையில் தவித்துவரும் வனத் துறையினர் மத்தியில், முதல்வரின் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் நியமனத்திற்கு வரவேற்பு: இதுகுறித்து தமிழ்நாடு வன அலுவலர் சங்க தலைவர் நசீர் கூறியதாவது: பணியாளர்கள் நியமனம்; இடர்படி வழங்குதல் உள்ளிட்டவை வரவேற்கத்தக்க விஷயங்கள். வனப்பணியில் உயர் பதவியில் மட்டுமே பெண்கள் உள்ளனர். தற்போது மற்ற பணிகளிலும் பெண்கள் நியமிக்கப்பட உள்ளது சிறப்பான முயற்சி.
வனத்துறையில் நீண்டகாலமாக கூடுதல் பணிக்கான படி, போலீசுக்கு உள்ளதுபோல், சி.யு.ஜி. மொபைல் போன் உள்ளிட்ட வசதிகளையும் முதல்வர் விரைவில் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: