Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 6 February 2016

7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு

புதுடெல்லி, பிப். 5–மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம் சீரமைக்கப்படும். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. பின்னர் தனது பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் அளித்தது. இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அதிருப்தி எழுந்தது. போக்குவரத்து அலவன்ஸ் உயர்த்தப்படவில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை ஆராயவும் முரண்பாடுகளை சரி செய்யவும் மத்திய அரசின் கேமினட் செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் 42 அரசுத்துறை செயலாளர்களுக்கு இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழு சம்பள கமிஷன் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி பல்வேறு தரப்பிடம் கருத்து கேட்டது. விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுத்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு அமலுக்கு வரும்.7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வருகிற மத்திய பட்ஜெட்டில்சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் நிதிமந்திரி அருண்ஜெட்லி கவனம் செலுத்தி வருகிறார். 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே அமல்படுத்தவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் மத்திய அரசுஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமலுக்கு வரும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. பல்வேறு அலவன்சுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச சம்பளம் ரூ.2.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வை ஜனவரி 1–ந் தேதியிட்டு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் சம்பள உயர்வை பெறலாம்.

No comments: