சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை(Preliminary exam) ஒத்திவைக்கும்படி, UPSC அமைப்பை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இத்தேர்வை, ஆகஸ்ட் 24ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
சிவில் சர்வீஸ் தேர்வு பாடத்திட்டம் தொடர்பான பிரச்சினையில், ஒரு தெளிவான முடிவு எட்டப்படும் வரை, இத்தேர்வை தள்ளி வைக்கலாம் என்று அரசு விரும்புவதாக, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Civil Services Aptitude Tests (C-SAT) - ஐ, நீக்க வேண்டுமென, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புவோர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2011ம் ஆண்டு, C-SAT முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில், இடம்பெறக்கூடிய இந்த புதிய முறையின் மூலம், சிவில் சர்வீஸ் பணியில் சேர விரும்பும் நபரின் பகுப்பாய்வு திறனை, விரிவான முறையில் சோதித்தறிய முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், "C-SAT முறை, சிவில் சர்வீஸ் தேர்வின் மதிப்பையே குறைப்பதாக உள்ளது என்றும், சிவில் சர்வீஸ் தேர்வர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளது என்றும், இந்தி மீடியம் படித்த மாணவர்கள் விஷயத்தில் பாகுபாடு பார்ப்பதாய் உள்ளது" என்றும் போராட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், "தேர்வெழுதுவோருக்கு 4 ஆண்டுகள் வரை வயதுவரம்பு தளர்வு வழங்க வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள், உள்துறை அமைச்சரை சந்தித்து, முறையிட்டு, இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் முன்னதாக கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment