சட்டப்பேரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,262 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்டு, அரசு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கு அதற்கான வசதிகள் செய்து தரப்படும்.
மின் பழுது, குழாய் பழுது, வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் பழுது போன்றவற்றை சரிசெய்யும் பணிக்கு தேவை அதிகரித்துள்ளது. பெண்கள், வளரிளம் பெண்கள், முதியோர் உள்ள வீடுகளில் மேற்கண்ட பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய வருவோர் கனிவுடனும், திறமையோடும் வேலையை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எனவே, அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களின் மாணவிகள், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகள், அரவாணிகள் ஆகியோருக்கு கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட் ரானிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக 300 பெண்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அத்துடன் ரூ.25 ஆயிரம் அரசு மானியத்துடன் ரூ.2 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று சுயமாக தொழில் தொடங்கவும் வழிவகை செய்யப்படும்.
புலம் பெயர்ந்து வாழும் கூலித் தொழிலாளர் களின் குடும்பங்களுக்காக சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக நடமாடும் அங்கன்வாடி சேவை செயல்படுத்தப்படும்.
புதிதாக தொடங்கப்பட்ட திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிச் சீருடைகளை விரைந்து தயாரிப்பதற்கு வசதியாக ரூ.14 லட்சம் செலவில் துணி வெட்டும் மையங்கள் அமைக்கப்படும்.
தஞ்சாவூரில் உள்ள பார்வையற்றோருக் கான அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயம் வழங்கப்படும்.மாற்றுத் திறனாளிகள் துறை நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் கணினிமயமாக்கப்படும்.
No comments:
Post a Comment