சென்னை லாயிட்ஸ் காலனியில் சென்னை மாநகராட்சியின் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு தொழிற்பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பயிற்சியின் முடிவில் பிளேஸ்மெண்ட் மூலம் டாடா மோட்டார்ஸ், டி.வி.எஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
இதில் கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் பயிற்சியில் 44 இடங்களும், மின்பணியாளர் பயிற்சியில் 21 இடங்களும், மோட்டார் வாகன மெக்கானிக் பயிற்சியில் 21 இடங்களும், எலக்ட்ரானிக் மெக்கானிக் பயிற்சியில் 21 இடங்களும், பொருத்துநர் (fitter) பயிற்சியில் 21 இடங்களும், குழாய் பொருத்துநர் பயிற்சியில் 42 இடங்களும் உள்ளன. குழாய் பொருத்துநர் பயிற்சியில் சேர்வதற்கு மட்டும் எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் போதும். மற்ற பயிற்சிகளுக்கும் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பதினான்கு வயது முதல் 40 வயது வரை இதில் சேரலாம்.
இந்த மையத்தில் சேருவதற்கு, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மற்ற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களுக்கு அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 27-ம் தேதி. விண்ணப்பத்தை சமர்ப்பித்த அனைவரும் ஜூலை 3-ம் தேதி காலை 10 மணிக்கு தொழிற்மையத்தில் நடைபெறும் கலந்தாய்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பம் கிடைக்கும் தொழிற்பயிற்சி மையத்தின் முகவரி: நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி நகர், ஸ்கொயர் பிளாக், முத்தையா முதலி தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, சென்னை-14. தொடர்புக்கு: 044-28473117.
No comments:
Post a Comment