Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 17 June 2014

பிளஸ் 1 புத்தகங்களை வாங்கக் குவிந்த மாணவர்கள்: டி.பி.ஐ. வளாகத்தில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு

பிளஸ் 1 வகுப்புகள் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 16) திறக்கப்பட்டன.
இதையடுத்து, பிளஸ் 1 புத்தகங்களின் சில்லறை விற்பனையும் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தப் புத்தகங்களை வாங்குவதற்காக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக விற்பனை கவுன்ட்டர்களில் திங்கள்கிழமை கூட்டம் அலைமோதியது.
 மாணவர்களும், பெற்றோர்களும் அதிகளவில் குவிந்ததால் கூடுதலாக 2 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன.

 பிளஸ் 1 புத்தக விநியோகம் தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்ந்துள்ள மாணவர்களுக்காக சுமார் 50 லட்சம் இலவசப் புத்தகங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலம் தேவையான புத்தகங்களின் எண்ணிக்கை பெறப்பட்டு புத்தகங்கள் அச்சடித்து அனுப்பப்பட்டுள்ளன.
இருந்தும் சில பள்ளிகள் மாணவர்களையே புத்தகங்கள் வாங்கச் சொல்வதால்தான் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும் டி.பி.ஐ. வளாகத்தில் குவிந்துவிட்டனர்.
 கூட்டத்தைச் சமாளிப்பதற்காக 2 கவுன்ட்டர்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டன. சில்லறை விற்பனையில் தமிழகம் முழுவதும் புத்தகங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவித்தனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளும் போதிய எண்ணிக்கையில் புத்தகங்களை முன்கூட்டியே பெற்றிருந்தால் மாணவர்களின் அலைச்சலைத் தவிர்த்திருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
 இந்த ஆண்டு மொத்தம் 4.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக 2.2 கோடி புத்தகங்களும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்காக 2 கோடி புத்தகங்களும் அச்சிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: