"விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு, நல்ல எதிர்காலம் உள்ளது" என, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர், ராமசாமி தெரிவித்தார்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண்மை, வேளாண்மை சார்ந்த இன்ஜினியரிங், பி.டெக்., தோட்டக்கலை உட்பட பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பல்கலையில் பல்வேறு துறைகளில் மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு, வேளாண்மை சார்ந்த, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
வேளாண் படிப்புகள் குறித்து, வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது: வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதை, மாணவர்கள் நன்றாக உணர்ந்து உள்ளனர். கிராமங்களில் வேளாண் வங்கி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற, வேளாண்மை சார்ந்த பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில், வேளாண் பட்டதாரிகளின் பங்களிப்பு, அதிகளவு தேவைப்படும் என்பதில் சந்தேகமில்லை. இத்துறைகளில், நாடு முழுவதும், அடுத்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உணவு சார்ந்த பொருட்களின் தரக் கட்டுப்பாடு, தர நிர்ணயம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெறும்.
தமிழகத்தில் 48 விதை பண்ணைகள் உள்ளன. இவற்றில், வேளாண் பட்டதாரிகள் பங்களிப்புடன், விதை உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ளது. தமிழக வேளாண் பட்டதாரிகளை நார்வே, பின்லாந்து நாட்டு நிறுவனங்கள் விரும்பி தேர்வு செய்கின்றன. நாடு முழுவதும், கடந்தாண்டை காட்டிலும், வேளாண் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு, துணைவேந்தர் கூறினார்.
வேளாண் பல்கலையில், இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு படிக்கும் காலத்திலேயே, ஆய்வகங்களில், ஊக்கத் தொகையுடன் வேலை தரப்படுகிறது. ஆராய்ச்சிகளில் வேளாண் சார்ந்த தொழில்நுட்பத்துக்கு, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
முதலிடம் பெற்றால் ஊக்கத்தொகை
வேளாண் பல்கலையில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் "இன்ஸ்பயர்" என்ற திட்டம் உள்ளது. இதன்படி, பள்ளி அளவில் முதலிடம், கல்லூரிகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டு "அஸ்பயர்" என்ற பெயரில் மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், மாணவர்களுக்கு எட்டு முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
No comments:
Post a Comment