Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 12 May 2014

2013-ல் பொறியியல் கல்லூரிகளில் பல துறைகளில் ஒருவர் கூட சேரவில்லை

கடந்த 2013-14 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகளில் பல துறைகளில் ஒருவர் கூட சேரவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
அதிக வரவேற்பு பெற்றுவந்த சி.எஸ்.இ. (கம்ப்யூட்டர் சயின்ஸ்), இ.சி.இ., (எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்) இ.இ.இ (எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்) போன்ற படிப்புகளில் கூட மாணவர் சேர்க்கை குறைந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொறியியல் படிப்புகள் மீது ஆர்வம் கொண்டுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலன் கருதி இந்த விவரங்களைத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அந்த இயக்குநரகத்தின் www.tndte.com என்ற இணையதளத்தில் இந்த விவரங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

2011-12, 2012-13 மற்றும் 2013-14 ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த விவரங்களின் மூலம், எந்தெந்தப் பிரிவுகளுக்கு இப்போது வரவேற்பு அதிகம் உள்ளது, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். அதன் மூலம் கல்லூரிகளின் தரத்தையும் ஓரளவுக்கு கணித்துவிட முடியும். எனவே, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
இயக்குநரகம் வெளியிட்டுள்ள இந்த விவரத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2013-14-இல் சி.எஸ்.இ. படிப்பில் 60 இடங்களில் ஒருவர் கூட சேரவில்லை. இசிஇ படிப்பில் 60 இடங்களில் 8 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இஇஇ படிப்பில் 60 இடங்களில் 13 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் 2013-14 ஆம் ஆண்டு ஐ.டி. பிரிவில் 90 இடங்களில் ஒருவர் கூட சேரவில்லை. மெக்கானிக்கல் பிரிவில் 60 இடங்களுக்கு 49 பேர் சேர்ந்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள பிரபல கல்லூரியில் இஇஇ படிப்பில் 60 இடங்களில் ஒருவர் கூட சேரவில்லை. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கில் 60 இடங்களில் ஒருவர் கூட சேரவில்லை. சி.எஸ்.இ. படிப்பில் 60 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இதுபோல் 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மொத்த இடங்களில் பாதிக்கும் குறைவான மாணவர்கள் கடந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியைப் பொருத்தவரை பி.இ. வேளாண் தொழில்நுட்பம் 40 இடங்களுக்கு 37 பேர், சிவில் 60 இடங்களுக்கு 51 பேர், சி.எஸ்.இ. 60 இடங்களுக்கு 55 பேர், இசிஇ 60 இடங்களுக்கு 52 பேர், இஇஇ 120 இடங்களுக்கு 112 பேர், மெக்கானிக்கல் 120 இடங்களுக்கு 106 பேர் என்ற அளவிலேயே 2013-14 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை
தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கை விவரத்தின்படி, கடந்த 2013-ஆம் ஆண்டு பல கல்லூரிகளில் முக்கியப் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
சில கல்லூரிகளில் ஒருவர் கூட சேராத நிலையும் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013-இல் மூன்று கல்லூரிகளில் சிஎஸ்இ படிப்பில் ஒருவர் கூட சேரவில்லை. 8 கல்லூரிகளில் ஐ.டி. படிப்பில் ஒருவர் கூட சேரவில்லை. 15 கல்லூரிகளில் முக்கியப் படிப்புகளான சி.எஸ்.இ., இசி.இ., இஇஇ, ஐ.டி. படிப்புகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கல்லூரிகளில் சி.எஸ்.இ. படிப்பில் ஒருவர் கூட சேரவில்லை. ஐ.டி. பிரிவைப் பொருத்தவரை 5 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை. மொத்தம் 10 கல்லூரிகளில் முக்கியப் படிப்புகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
கோவையைப் பொருத்தவரை இரண்டு கல்லூரிகளில் சி.எஸ்.இ. படிப்பில் ஒருவர் கூட சேரவில்லை. 8 கல்லூரிகளில் ஐ.டி. பிரிவில் ஒருவர் கூட சேரவில்லை.

No comments: