Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 12 May 2014

வெளியாகி இருப்பது மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவு மட்டுமல்ல, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம்.

மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதும், சென்ற ஆண்டைக் காட்டிலும் 2.5% தேர்ச்சி அதிகரித்து இருப்பதும் வெளிப்படையாகத் தெரிபவை. இருப்பினும் இந்த தேர்வு முடிவுகள் சொல்லாமல் சொல்லும் தகவல்கள் மிகவும் கவலைக்கு இடமளிப்பவை.

முதலாவதாக, தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 133 மாணவர்களில் (94 மாணவிகள், 39 மாணவர்கள்) ஒருவர்கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர் அல்ல. இரண்டாவதாக, தேர்ச்சி விகிதம் அதிகரித்துவிட்டதாக கூறிக்கொண்டாலும், கூட்டுமதிப்பெண் 60 விழுக்காடு (அதாவது 720 மதிப்பெண்களுக்கும் அதிகமாக) எடுத்துள்ள மாணவர்கள் 56 விழுக்காடு மட்டுமே
ஆக, அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் குறைந்துகொண்டே போகிறது என்பதைக் காணுறும் அதேவேளையில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களில் 54% பேர் 720 மதிப்பெண்களுக்கும் குறைவாக, விடைத்தாள் மதிப்பீட்டாளர்களால் கருணை மதிப்பெண் தரப்பட்டு, ஜஸ்ட் பாஸ் ஆனவர்களே அதிகம் என்பதைக் காட்டுகிறது.
சென்ற ஆண்டு அதிகளவில் மாணவர்கள் 100% மதிப்பெண் பெறமுடியாதபடி வினாத்தாள் கடினமாக இருந்தது என்று பலரும் புகார் கூறியதால் இந்த ஆண்டு வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதனால்தான் சென்ற ஆண்டு 36 பேர் மட்டும் 100% எடுத்த இயற்பியல் தேர்வில் இந்த ஆண்டு 2,710 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம் தவிர அனைத்து பாடங்களிலும் இந்த ஆண்டு 100% மதிப்பெண் பெற்றோர் அதிகம். இந்த அளவுக்கு வினாத்தாள் எளிமையாக இருந்தபோதிலும், 720 மதிப்பெண்களுக்கு குறைவாக பாதி பேர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்றால், அவர்களின் கதி என்ன?
ஆசிரியர் நியமனங்களில் தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக போராட்டங்கள், வழக்குகள் தொடுத்து, அரசை நிர்பந்தப்படுத்தி, மதிப்பெண்களில் தளர்வு பெற்றிருக்கும் இந்த வேளையில், அரசுப் பள்ளியில் ஒரு மாணவர்கூட இந்த 133 பேரில் காணப்படவில்லை என்கின்றபோது, தகுதி மதிப்பெண் மிகவும் தளர்த்தப்பட்டு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் எத்தகைய கல்வித்தரம் இருக்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இந்த தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ள மாணவி சுஷாந்தியின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலும், அவரும்கூட ஒரு தனியார் பள்ளி மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார். அப்படியானால் சாதாரண மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? அவர்களின் தேர்வு எதுவாக இருக்கும்? தன் மகள் முதலிடம் பெற்றதற்காக அந்தத் தந்தை பெருமைப்படக்கூடாது. தனியார் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்ததற்கு வெட்கப்பட வேண்டும். அவர் மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அத்தனை அரசுப் பள்ளி ஆசிரியர்களும்!
அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை சலுகைகள் அளித்தும் இலவச உணவு உறைவிடம் அளித்தும் தனியார் பள்ளிகள் கொண்டுபோய் தங்கள் நிறுவனத்தின் மூலம் அவர்களை அதிக மதிப்பெண் பெறச்செய்து, தங்கள் வணிகத்தை பெருக்கிக்கொள்கிறார்கள் என்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வாதம். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கற்பித்தலில் ஈடுபடுவதில்லை என்பதைக் கண்ணெதிரே காண்பதால்தான் பெற்றோர்கள் அதற்கு இணங்குகிறார்கள் என்பதும் நிஜம்தானே?
தனியார் பள்ளிகள் பிளஸ் 1 ஆண்டிலேயே பிளஸ் 2 பாடத்தை நடத்தி, மாணவர்கள் மனதில் பாடங்களை உருவேற்றி விடுகிறார்கள். இதையே அரசுப் பள்ளிகளும் செய்வது இயலாது. இதற்கு ஒரே மாற்று, பிளஸ் 2 படிப்பை, நான்கு பருவத் தேர்வுகளாக மாற்றி, நான்கு பருவத் தேர்வுகளின் மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் படுத்தினால், அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டியிட வாய்ப்பாக அமையும். மாணவர்களும், அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதும் திறன் பெறுவார்கள்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு சிறப்பு உறைவிடப் பள்ளியை உருவாக்கி, மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் 90% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவரையும் அதில் சேர்த்து, திறமையான ஆசிரியர்களைக்கொண்டு இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்தால், தனியார் பள்ளிகளுக்கு இணையான இலக்கு சார்ந்த போட்டியை சந்திக்கவியலும்.
வெளியாகி இருப்பது தேர்வு முடிவு மட்டுமல்ல, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம். மக்கள் நம்பிக்கை இழக்கும் முன்பாக களத்தில் இறங்கியாக வேண்டிய கட்டாயம் அரசுப் பள்ளிகளுக்கும் கல்வித் துறைக்கும் உள்ளது. இறங்கினால் மேன்மை; இல்லையேல் எய்துவர் எய்தாப் பழி.

No comments: