அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக இந்த ஆண்டு அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெறு வோரின் எண்ணிக்கையும் 5 மடங்கு உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 74 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் வகையில், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறு ஆய்வு திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக ரூ.20 ஆயிரமும் முதுகலை மாணவர்களுக்கு குறுஆய்வு திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த உதவித்தொகை திட்டங்களின்கீழ் ஆண்டுதோறும் 20 ஆசிரியர்களும், 20 மாணவ, மாணவிகள் மட்டுமே பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர்களையும் மாணவர் களையும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை மற்றும் அதை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறு ஆய்வு திட்டத்தின் கீழ் புதிய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாநில உயர்கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கலாம். முதலில் தாங்கள் மேற் கொள்ள உள்ள ஆராய்ச்சி குறித்து கருத்துருவை அனுப்ப வேண்டும். நிபுணர் குழு ஒப்புதல் அளித்தால் அந்த ஆராய்ச்சிப் பணிக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இதுவரை, 20 ஆசிரியர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வந்தது. வரும் கல்வி ஆண்டு முதல் இந்த உதவித்தொகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளின் எண்ணிக்கையும் 20-ல் இருந்து 100 ஆக உயர்த்தி வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
100 மாணவர்கள்
குறு ஆய்வு திட்டத்தின் கீழ், அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலை முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டி விண்ணப்பிக்கலாம். அனுமதிக்கப்படும் ஆராய்ச்சிப் பணிக்கு ரூ.15,000 வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த திட்டத்தின் கீழ் 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு பேராசிரியர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment