தனியார் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவப் புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுவதாக அந்த கழகத்தின் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்க உள்ளன. வகுப்பு தொடங்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முப்பருவ முறையின் கீழ் மூன்றாம் பருவத்துக்காக 2.3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 1.58 கோடி புத்தகங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் வழியாக இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளி மாணவர்களுக்கான 81 லட்சம் பிரதிகள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் (மழலையர் பள்ளி) ஆகியோர் மூலம் தனியார் பள்ளிகளுக்கான புத்தக விற்பனை நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment