முதன்முறையாக இளநிலை சட்டப் படிப்புகளைப் போல் முதுநிலை சட்டப் படிப்புகளிலும் (எம்.எல்.) ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப் படிப்புகளுக்கான இயக்குநரகம் (டி.எல்.எஸ்.) இந்த ஒற்றைச் சாளர கலந்தாய்வை நடத்துகிறது.
தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் இளநிலை (பி.எல்.) சட்டப் படிப்பு மற்றும் ஐந்தாண்டு (பி.ஏ.,பி.எல்.) ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
ஆனால், இந்த கல்லூரிகளில் வழங்கப்பட்டுவரும் முதுநிலை (எம்.எல்.) சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே இதுவரை நடத்தி வந்தன.
கல்லூரிகளே விண்ணப்பங்களைப் பெற்று, மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொண்டன.
இந்த நிலையில், எம்.எல். படிப்புகளிலும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை செய்யும் முறை இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை இந்த கலந்தாய்வு நடைபெற்றது. அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 160 எம்.எல். இடங்களுக்கு 186 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் தகுதி பெற்ற 160 மாணவர்களும் ஒரே நாளில் சேர்க்கை கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற கலந்தாய்வு தொடக்க நிகழ்ச்சியில் சட்டத் துறை செயலர் ஜெயச்சந்திரன் பங்கேற்று மாணவர்களுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கினார்.
இதுகுறித்து சட்டப் படிப்புகளுக்கான இயக்குநர் நாராயண பெருமாள் கூறியது:
பி.எல். படிப்புகளைப் போல், எம்.எல். மாணவர் சேர்க்கையிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனடிப்படையில் 2014-15 ஆம் ஆண்டுக்கான எம்.எல். மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் சென்னையிலேயே இந்த கலந்தாய்வும் நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment