மாறிவரும் கல்வி சூழலுக்கு ஏற்பவும் கணினி பயன்பாட்டுக்கு இணையாகவும் ஒரு மொழி பயணிப்பதில் தான் அதன் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் தாய் மொழியான நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன.
தொழில் படிப்பில் தமிழை புகுத்தும் முயற்சியாக கடந்த 2010 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் தமிழ் வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டுமானம் மற்றும் இயந்திரவியல் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் வழிக்கல்வி மேற்கொண்டு மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.
இந்த சூழலில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது? அவர்களுக்கு 20 சதவிகித வேலைவாய்ப்பை அரசு உறுதிசெய்திருந்த போதும், அதுபோதுமானதுதானா? தமிழ்வழி மாணவர்களுக்கு இந்த நிலை ஏற்பட என்ன காரணம்? ஆங்கிலத் திறன் இல்லாத ஒரே காரணத்திற்காக அவர்கள் புறக்கணிக்கப்படுக்கிறார்களா?
தமிழ் வழி பொறியல் படிப்பில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.? இவற்றைப் பற்றித்தான் இன்றைய பெருஞ்செய்தியாக, விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் அப்பால் ஒர் ஆழமான புரிதலுக்கு பெருஞ் செய்தியின் தொகுப்பு.
2010-ல் தமிழ் வழி படிப்பு தொடக்கம்
தமிழ் வழிக் கல்வியில் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதாகக் கூறப்படுகிறது.
2010ம் ஆண்டில், தமிழ் வழியில், முதல் முறையாக சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகள் தொடங்கப்பட்டன. இரு பிரிவுகளிலும் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் 120 மாணவர்களில், இருவர் மட்டுமே வளாக நேர்காணலில் தேர்வாகியிருக்கின்றனர்.
அதேநேரத்தில் ஆங்கில வழியில் படித்த சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பணிகளுக்குத் தேர்வாகியிருக்கின்றனர். இதில், தமிழ் வழியில் படித்த மாணவர்கள், ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருந்த திறனறி கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாததும், ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் முடியாமல் போனதும் அவர்கள் தோல்வியடையக் காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழ் வழியில் பொறியியல் படிப்பதை பெரும்பாலான மாணவர்களே தவிர்ப்பதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது? தமிழ் வழியில் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்கள், அதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி...
தமிழ்வழி மாணவர்களே தயக்கம்
அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கலந்தாய்விற்கு வரும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றவர்களே.ஆனால், உயர் கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்வழியில் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய அவர்கள் தயங்குகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றதால், ஆங்கில மொழியாளுமை குறைவாக இருப்பதாகவும், எனவே, உயர் கல்வியை ஆங்கில வழியில் படிக்க விரும்புவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்வழியில் படித்தால் புரிதல் அதிகம் ஆனால், தற்போது தமிழ்வழியில் பொறியியல் பயின்று வரும் மாணவர்களின் கருத்தோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
தமிழ் வழியை தேர்வு செய்வதால், கிண்டி பொறியியல் கல்லூரி போன்ற சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதோடு, கடினமான பாடங்களைப் படிப்பதற்கும் உதவியாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தொழிற்கூடங்களுக்குச் செல்லும் போது, ஆங்கில வழி மாணவர்களைவிட தமிழ் வழி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
தாய்மொழிக் கல்வி உதவுகிறது
தொழிநுட்பக் கல்வியை பயிலும்போது பாடங்களின் அடிப்படைகளை தெளிவாக புரிந்துகொள்ள தாய்மொழிக் கல்வி உதவுகிறது என்பது இந்த மாணவர்களின் கருத்துகள் மூலம் நமக்கு விளங்குகிறது.
"புத்தகத் தட்டுப்பாடு உள்ளது"
தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிந்துவிட்ட போதிலும், அவற்றிற்கு தேவையான புத்தகங்கள் போதிய அளவில் கிடைக்காத நிலை நீடித்து வருவதாகச் சொல்கின்றனர் மாணவர்கள்.
எனவே, மாணவர்களுக்கு தேவையான பாடங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து பேராசிரியர்கள் வழங்கி வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பொறியியலின் அனைத்துப் பிரிவுகளுக்கும் தமிழிலேயே புத்தகங்கள் இயற்றப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்.
"நூலகம் போன்ற வசதியில்லை"
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் புத்தகங்கள் தவிர, மேலும் பல தமிழ் வழிப் புத்தகங்கள் பொறியியல் மாணவர்களுக்கென வெளியாகியுள்ளன.
ஆனால், அனைத்துப் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் படியாக, நூலகம் போன்ற எந்தவொரு ஏற்பாடும் இதுவரை செய்யப்படவில்லை. தற்போது தமிழ் வழி பொறியியல் புத்தகங்களின் தேவைகள் அதிகரித்து வருவதால், புத்தகங்களின் வரத்தும் அதிகரிக்கும் என்கிறார் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான தமிழ் வழிப் புத்தகத்தை எழுதியுள்ள நக்கீரன்.
"புத்தகங்கள் இல்லாத அவலம்"
ஒரு புதிய பாட முறையைத் தொடங்கிவிட்டு, அதன் முதல் பிரிவு மாணவர்கள் தங்களது இறுதியாண்டில் இருக்கும் சமயத்தில்தான் புத்தகங்கள் இயற்றப்பட துவங்கியுள்ளதை அவல நிலை என வர்ணிக்கிறார்கள் கல்வியாளர்கள்.
'நல்ல விதமாக பார்க்கவேண்டும்'
தமிழ் வழியில் பொறியியல் படிப்பை படித்து வருபவர்கள் வளாக நேர்காணலில் தேர்வாகி இருப்பதை வரவேற்க வேண்டும் என தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு பேர் மட்டுமே தேர்வாகி இருப்பதாகவும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் புறக்கணிப்படுவதாகவும் சொல்வது சரியல்ல என்றும் நிறுவனங்கள் கூறியுள்ளன. இது குறித்து பேசிய மாஃபா வேலை வாய்ப்பு மைய நிறுவனர் பாண்டியராஜன், அண்ணா பல்கலைக் கழகத்தில், 10 நிறுவனங்களே நேர்காணலை நடத்தி இருப்பதாகக் கூறியுள்ளார். இன்னும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வளாக நேர்காணலை நடத்த இருப்பதால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் மேலும் தேர்வாக வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தனித் திறன் மிக்கவர்கள் என்றும் பாண்டியராஜன் கூறினார்.
'ஆங்கிலத் திறனை மேம்படுத்த வேண்டும்'
தமிழ் வழியில் பொறியியல் படித்து வரும் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி இது. தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காமல் போனாலும், அரசுப் பணி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதே அது.
தமிழ் வழியில் படித்திருந்தால், அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக, கோவை நகரில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த செம்மொழி மாநாட்டின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்கான அரசாணை, செப்டம்பர் 2010ல் வெளியிடப்பட்டது. இதன்படி, தற்போது தமிழ் வழியில் பட்டம், பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். முதல் முறையாக, தமிழ் வழியில் பொறியியல் படித்து வெளியேறும் 120 பேரில், பலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் பொறியியல் படிப்பு வரை தொடர்ந்து தமிழ்வழிக் கல்வியில் மட்டுமே படித்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment