சட்டம் பயில்வோர் எண்ணிக்கை வட மாநிலங்களைவிட தமிழகத்தில் மிகவும் குறைவு. மாணவர்களிடம் சட்டப் படிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என கூறலாம். தமிழகத்தில் சென்னை, வேலூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளும், சேலத்தில் தனியார் சட்டக் கல்லூரியும் உள்ளன. தற்போது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் சட்டப் படிப்புகளை அளிக்கின்றன.
2000-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி பொறியியல் படிப்புக்கான இடங்கள் 32 ஆயிரமாக இருந்தன. 2013-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது. சட்டப் படிப்பைப் பொறுத்தவரை, 2000-ம் ஆண்டில் 1300 இடங்கள் இருந்த நிலையில், 2013-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1600 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது.
பிளஸ் 2 முடித்ததும் எல்.எல்.பி. ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேரலாம். அல்லது, பி.ஏ. போன்ற பட்டப் படிப்புகளைப் படித்த பிறகு, பி.எல். இரண்டு ஆண்டுப் படிப்பில் சேர்ந்தும் படிக்கலாம். பி.ஏ., எல்.எல்.பி., பி.பி.ஏ., எல்.எல்.பி. ஆகிய சட்டப் படிப்புகள் உள்ளன. இதில் சர்வதேச சட்டம், கிரிமினல் சட்டம், கார்ப்பரேட் சட்டம், சைபர் சட்டம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளை எடுத்துப் படிக்கலாம்.
தேசிய அளவில் சட்டம் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழங்களில் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இவற்றில் சேர விரும்புவோர் ‘காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’ (சிஎல்ஏடி) என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். பொது அறிவுப் பாடங்களுக்கு 50 மதிப்பெண், கணிதத்துக்கு - 20, லீகல் ஆட்டிடியூட் - 50, லாஜிக்கல் ரீசனிங் - 40, ஆங்கிலத்துக்கு - 40 என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பில் பிற சமூகத்தினர் 45 சதவீத தேர்ச்சியும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 40 சதவீத தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 22 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 20 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பெங்களூர் நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இண்டியா யுனிவர்சிட்டி, ஐதராபாத் நல்சர் யுனிவர்சிட்டி ஆஃப் லா, காந்தி நகரில் குஜராத் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூரில் நேஷனல் லா யுனிவர்சிட்டி உள்பட நாடு முழுவதும் 14 சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை இணைந்து காமன் லா அட்மிஷன் தேர்வை நடத்துகின்றன. ஒரே விண்ணப்பம் மூலம் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 2014-ம் ஆண்டு மே மாதத்தில் தேர்வு நடக்கும்.
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதிப்பெண் அடிப்படையில் இங்குள்ள கல்லூரிகளில் சேர வேண்டும். தேசிய அளவிலான கல்லூரியில் சேர விரும்புவோர் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.
ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு தேசிய சட்டக் கல்லூரியை தமிழக முதல்வர் தற்போது அமைத்துள்ளார். இந்த கல்லூரியில் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை செலவாகும்.
சட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வழக்கறிஞர், மாஜிஸ்திரேட், நீதிபதி போன்ற பணிகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் பணி, சுயதொழில் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
No comments:
Post a Comment