மத்திய மனிதவள அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி, நாட்டில் வழங்கப்படும் தொலைநிலைக் கல்விக்காக, ஒரு இடைக்கால விதிமுறையை உருவாக்குமாறு யு.ஜி.சி.,க்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஏனெனில், தொலைநிலைக் கல்வியை கண்காணிக்கும் வகையில், ஒரு நிரந்தர விதிமுறை அதிகார அமைப்பை உருவாக்குவதற்கான சட்டத்தை, நாடாளுமன்றம் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், இந்த தற்காலிக ஏற்பாட்டை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாட்டில் தற்போது வழங்கப்படும் தொலைநிலைக் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளன. காலத்திற்கு உதவாத பாடத்திட்டம், பற்றாக்குறையான தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவை.
இந்திய தொலைநிலைக் கல்வி கவுன்சிலை அமைக்க வேண்டும் என்பது இந்த கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்று. இதன்மூலம், பாடத்திட்டங்கள், தேர்வுகள் மற்றும் தொலைநிலைக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முடியும்.
DECI எனப்படும் அந்த தொலைநிலைக் கல்வி கவுன்சில், AICTE, UGC மற்றும் NCTE ஆகிய அமைப்புகளுக்கு சமமான அளவில் வைக்கப்பட வேண்டும் என்பது அந்த கமிட்டியின் பரிந்துரை. ஆனால், தற்போதைய நிலையில், மத்திய மனிதவளத் துறையால் நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலை நிலவுகிறது.
தற்போதைய UGC, AICTE போன்ற அமைப்புகளை ஒரே கட்டுப்பாட்டு அமைப்பின்கீழ் கொண்டுவரக்கூடிய, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில்(NCHER) சட்டத்தை நிறைவேற்ற மனிதவள அமைச்சகம் எண்ணியது. இதுபோன்ற மிக முக்கிய மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டிருக்கும்போது, இதர கல்வி தொடர்பான மசோதாக்கள், நிறைவேற்றப்படுவதற்காக நாடாளுமன்றத்தில் காத்துக் கொண்டுள்ளன.
தொலைநிலைக் கல்வி என்பது, நாட்டின் கல்வி உள்கட்டமைப்பு குறைபாட்டால், படிக்க முடியாமல் இருக்கும் நபர்களுக்கு, உயர்கல்வி வழங்குவதாகும்.
No comments:
Post a Comment