பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) மெத்தனப்போக்கால் இரண்டு முறை நெட் தேர்வை எழுதும் வாய்ப்பு பறிபோனதாக பார்வையற்ற இளைஞர் மிரண்டா தாம்கின்சன் கூறினார்.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை எனது சொந்த ஊர். தற்போது கும்மிடிப்பூண்டியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எனக்கு பிறவி முதல் இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. இதனைத்தொடர்ந்து செவித்திறனும் செயல் இழந்தது.இருப்பினும் விடாமுயற்சியால் படித்து இரண்டு முதுகலைப் பட்டங்களை பெற்றுள்ளேன்.
ஆசிரியராக வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். அதற்காக பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் (யுஜிசி) நெட் தேர்வை எழுத முயற்சித்து வருகிறேன். தேர்வெழுத இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் தேர்வை எழுத முடியவில்லை.
பிறவிக் குறைப்பாடு காரணமாக வழக்கமான முறையில் தேர்வெழுதுவதில் சிரமம் உள்ளது. ஆகையால் நெட் தேர்வில் பிரெய்லி (ஆழ்ஹண்ப்ப்ங்) முறையில் கேள்வித்தாள் வழங்க வேண்டும் என யுஜிசியிடம் அனுமதி கோரியிருந்தேன்.
ஆனால் யுஜிசி நிர்வாகம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இது குறித்து ஊனமுற்றோருக்கான சட்ட மையத்தில் (வித்யா சாகர்) புகார் அளித்தேன்.
அந்த அமைப்பின் உதவியுடன் ஊனமுற்றோருக்கான மத்திய மற்றும் மாநில அரசு நிர்வாகங்களிடமும் மனு அளித்தேன். நெட் தேர்வில் பிரெய்லி முறை கேள்வித்தாள் வழங்க வேண்டும் என யுஜிசிக்கு அரசு நிர்வாகங்கள் அறிவுறுத்தின.
இருப்பினும் மத்திய, மாநில அரசு நிர்வாகங்களின் அறிவுறுத்தலை யுஜிசி ஏற்கவில்லை. இதுவரை பிரெய்லி முறை கேள்வித்தாள் வழங்குவது தொடர்பான எந்தவித உத்தரவையும் யுஜிசி பிறப்பிக்கவில்லை. கடந்த பிப்ரவரியில் திருத்தப்பட்ட விதிமுறைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி தேர்வெழுதும் ஊனமுற்றோருக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அந்த விதிகளையும் யுஜிசி மதிக்காமல் இருந்து வருகிறது.
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி 3-ஆவது முறையாக நெட் தேர்வை எழுத உள்ளேன். ஆனால் எனது கோரிக்கை தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை யுஜிசியிடம் இருந்து கிடைக்கவில்லை.
சட்ட அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கிறேன். யுஜிசி நடவடிக்கையால் எனது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து உள்ளேன் என்றார் மிரண்டா தாம்கின்சன்.
No comments:
Post a Comment