Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 12 November 2013

DGE: பார் கோடு, புகைப்படத்துடன் விடைத்தாள்: மார்ச் பொதுத் தேர்வுகளிலும் பின்பற்ற முடிவு

ஆள்மாறாட்டம், பூர்த்தி செய்வதில் பிழைகள், கூடுதல் பக்கங்களுக்காக காத்திருத்தல் போன்ற சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் பார் கோடு, புகைப்படம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பிய விடைத்தாள்களை வரும் மார்ச் மாத பள்ளி பொதுத் தேர்வுகளில் பயன்படுத்துவதற்கு அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தனித்தேர்வில் வழங்கப்பட்ட விடைத்தாள்கள் அதிக பக்கங்கள், பார் கோடு மற்றும் புகைப்படம் போன்ற மாற்றங்களுடன் வழங்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த புதிய விடைத்தாள் வடிவத்தை வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் புத்தகத்தில் மாணவரின் புகைப்படம் அச்சிடப்படுவதால் ஆள் மாறாட்டம் தடுக்கப்படுவதோடு, பார் கோடு முறையினால் விடைத்தாள் மதிப்பீட்டின்போது குறிப்பிட்ட விடைத்தாளை அடையாளம் காணப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
இதுவரை பின்பற்றப்பட் டம்மி எண் முறையில் ஏற்பட்ட குழப்பங்களை இந்த விடைத்தாள்கள் மூலம் தவிர்ப்பதற்காகவே பார்கோடு முறையை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, விடைத்தாள் முகப்பில் உள்ள விவரப் படிவத்தில் இரு ஜோடி பார் கோடுகள் அச்சிடப்பட்டிருக்கும்.
இதில் ஒன்று மாணவரின் விவரங்கள் கொண்டதாகவும், மற்றொன்று அவரது விடைத்தாளின் விவரங்கள் அடங்கியதாகவும் இருக்கும். பார்கோடு எண்களை கண்டறியும் வசதிபடைத்த அதிநவீன செல்போன்கள் மூலமாகக் கூட இந்த விடைத்தாளின் விவரங்களை தெரிந்து கொள்ளமுடியாதது இதன் சிறப்பு அம்சம்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் இந்த விடைத்தாள் பயன்படுத்தப்படவுள்ளதால் தவறுகள் களையப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளும், பத்தாம் வகுப்பினருக்கு 30 பக்கங்கள் கொண்டதாகவும் வழங்கப்படும். மாணவர்கள் சுய விவரங்கள் விடைத்தாள்களிலேயே அச்சிடப்படுவதால் பூர்த்தி செய்யும்போது ஏற்படும் தவறுகள் இருக்காது என்று தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments: