தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றம் வேண்டும், என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொருளாதார சூழ்நிலையால் நன்றாக படிக்கும் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் 1991ம் ஆண்டு "ஊரக திறனாய்வு தேர்வு" திட்டத்தை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அமல்படுத்தினார்.
இதன்படி, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் 50 மாணவிகள், 50 மாணவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு பிளஸ் 2 படிக்கும் வரை ஆண்டுதோறும் ரூ.1000 கல்வி
உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கான நிபந்தனையில் மாணவர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வித மாற்றத்தையும் அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, தற்போது உயர்ந்துள்ள விலையேற்றத்திலும் கல்வி உதவித் தொகை ரூ.ஆயிரம் என்பதே நீடிக்கிறது.
அதேபோல், 1991ல் 8ம் வகுப்பு படித்த மாணவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்திற்குள் இருந்தனர். ஆனால், தற்போது 8 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். ஆனாலும், மாவட்டத்திற்கு 100 மாணவர்கள் என்ற விகிதத்திலேயே தேர்வு செய்யப்படுகின்றனர். இதை அதிகரிக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து. இதற்காக, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக ஒட்டன்சத்திரம் கிளை செயலாளர் இளங்கோவன் கூறியதாவது: "இத்திட்டத்தில் கல்வி உதவித் தொகை 22 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாதது விசித்திரமாக உள்ளது. 1991க்கும், 2013க்கும் உள்ள விலைவாசி, கல்விக் கட்டணத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாகவும், மாணவர்கள் எண்ணிக்கையை 500 மாணவி, 500 மாணவர் என 1000ஆகவும் தேர்வு செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இத்திட்டத்தில், நவீன காலத்திற்கு ஏற்ப அவரே மாற்றம் கொண்டுவந்தால் கிராமப்புற மாணவர்கள் பயனடைவார்கள்," என்றார்.
பல மனுக்கள்; ஒரே பதில்
ஆசிரியர்கள், சமூக அமைப்புகள் சார்பில், ஊரக திறனாய்வு தேர்வு கல்வி உதவித் தொகையும், மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என, முதல்வர் தனிப் பிரிவுக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கில் மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், "இது அரசின் கொள்கை முடிவு. இதை மாற்ற முடியாது. இதனால், உங்கள் மனு நிராகரிக்கப்படுகிறது," என்று மட்டும் பதில் அனுப்பப்படுவதாக மனுதாரர்கள் வேதனை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment