வானில் அலையும் மேகங்களைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரின் மன நிலையைப் பொருத்து அந்த மேகங்கள் பல்வேறு விதமான உருவங்களாக நமக்குத் தெரிகின்றன. ஒருவருக்குத் தேவதையாகத் தெரியும் உருவம், மற்றொருவருக்கு பயமுறுத்தும் கற்பனையாகத் தெரியலாம். இதேபோல நமக்கு முன்னே காட்டப்படும் மைத் தீற்றல்களின் வழியாக நமக்குத் துலக்கமாகும் உருவங்களை வைத்து, நம் மனநிலைகளை அறிய முடியும் என்கிறது ரோஷாக் டெஸ்ட். இம்முறையை சுவிட்சார்லாந்து மனநல மருத்துவரான ஹெர்மான் ரோஷாக் (Hermann Rorschach) கண்டுபிடித்தார்.
இம்முறையில் 10 விதமான இங்க்ப்ளாட்ஸ் (inkblots) பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை ‘இங்க்ப்ளாட்ஸ் டெஸ்ட்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. படங்களில் காட்டியுள்ளபடி வெள்ளைப் பின்னணியில் ஒருவிதமான மைத் தீற்றல் இருக்கும். இதுதான் இங்க்ப்ளாட். வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு மையால் ஆன படங்கள் ஐந்தும், கருப்புப் படங்களுடன் சிவப்பு வண்ணம் சேர்க்கப்பட்டவை இரண்டும், மீதி வண்ணக் கலவையிலான படங்களும் இத்தொகுப்பில் உள்ளன. இப்படங்களுக்கு முன்னால் நிற்கும் ஒருவர் இப்படங்களின் வழியாக ஒன்றை உணர்வார். நிலையான உருவத்தையோ அல்லது அசையும் பிம்பங்களையோ உணரக் கூடும். இந்த அடிப்படையில் ஒருவரின் மனநிலையை இந்தப் படங்களை வைத்து அறிந்துகொள்ள முடியும். இதில் காட்டப்படும் சிவப்பு நிறம் கோபத்தின் வெளிப்பாட்டை அறிய உதவும். வெளித் தோற்றத்தில் அறிய முடியாத பல விதமான உளவியல் பிரச்சினைகளை இந்தப் பரிசோதனை மூலம் வெளிக்கொணர முடியும் என்கிறார் ரோஷாக். அது மட்டுமல்ல ஒருவரின் நுண்ணறிவு, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன், உணர்வுசார் உறுதித்தன்மை ஆகியவற்றைப் பற்றியும் ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.
ஹெர்மன் ரோஷாக் 1884ஆம் ஆண்டு சுவிட்சார்லாந்தின் ஸூரிக் நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஓவியக் கலையில் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார். அந்தப் பாதிப்பால் சிறுவன் ரோஷாக்கும் வெள்ளைக் காகிதத்தில் எதையெதையோ தீட்டிப் பார்த்துள்ளான். எந்த நேரமும் மையும் அட்டையுமாக இருந்ததால் ‘இங்க்ப்ளாட்ஸ்’ என்று வகுப்புத் தோழர்கள் அவனுக்கு பட்டப்பெயர் வைத்துள்ளனர். அவன் வரைந்த ஒரு உருவம் அவன் நண்பர்களுக்கு வேறு ஒன்றாகத் தெரிவதைப் பற்றி நுட்பமாக யோசித்துள்ளான்.
இதைத்தான் பின்னால் மருத்துவக் கல்லூரி மாணவனான பிறகு ரோஷாக் ஆராயத் திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு 1911இல் இதற்கான முறையான ஆய்வைத் தொடங்கியுள்ளார். இங்க்ப்ளாட்ஸ், மனிதனின் பண்புகளைக் காட்டக்கூடிய திறமைகொண்டவை என்பதை ரோஷாக் ஆய்வில் கண்டறிந்துள்ளார். இந்த ஆய்வுக்காகப் பத்தாண்டுகள் உழைத்துள்ளார். பள்ளிச் சிறுவர்களிடமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளிடமும் இப்படங்களைக் காண்பித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். 1918ஆம் ஆண்டு அவர் சாதாரண மக்களிடமும் மனநல பாதிப்புக்குள்ளானவர்களிடமும் இங்க்ப்ளாடைக் காண்பித்துப் பரிசோதித்துள்ளார். அதில் மிகப் பெரிய வித்தியாசத்தை அவர் கண்டறிந்துள்ளார்.
1921இல் அவர் தன் ஆய்வு முடிவுகளை ‘Psycho diagnostics’ என்ற பெயரில் வெளியிட்டார். இந்தப் பரிசோதனை முறை மனிதப் பண்புகளைக் கண்டறியும் முறையாக 1939ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மனநலப் பிரச்சினைகளைக் கண்டறிவதற்கான பரிசோதனை முறையாக இம்முறை இன்றும் உலகம் முழுவதும் பரவலாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. குழந்தைகளின் மன நிலையை அறிந்துகொள்ளும் பொருட்டு மருத்துவத் துறையிலும், ராணுவ சிறைச்சாலைகளில் கைதிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகவும், பெரிய நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுக்காகவும் இம்முறை பின்பற்றப்படுகிறது.
உலகம் முழுவதும் ரோஷாக் உருவாக்கிய இந்தப் பத்துப் படங்கள்தாம் பரிசோதனைக்காகப் பயன்பட்டு வருகின்றன. இன்று இப்படங்கள் விளக்கங்களுடன் இணையதளங்களில் கிடைக்கின்றன. இவை அனைவருக்கும் பரிச்சயம் ஆகிவருவதால் இவற்றைக்கொண்டு யாரையும் தெளிவாகப் பரிசோதிக்க முடியாத நிலை உருவாகிவருகிறது என்கிறார் மனநல மருத்துவர் குணசீலன். ஏற்கெனவே, இந்தப் படங்களைப் பார்த்தவர்கள், அப்படங்களைப் பற்றிய குறிப்புகளைப் படித்துவிட்டு முன்முடிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே, மனநல மருத்துவர் இந்தப் படங்களைக் காட்டி அவர்கள் கருத்தைக் கேட்கும்போது, அவர்களது உள்ளார்ந்த தன்மைகள் வெளிப்படாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், இந்தப் படங்கள் இணையதளங்களில் வெளியாவதைத் தடுப்பது இயலாத காரியம். ஆகையால், ரோஷாக்கின் இப்படங்களை முன்மாதிரியாக வைத்துப் புதிய படங்கள் உருவாக்கப்பட வேண்டியது தற்போது அவசியமாகிறது.
No comments:
Post a Comment