மேலைப் பல்கலைக்கழகங்களில் கலைத் துறைப் பாடங்களின் (Humanities) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மறுமலர்ச்சி கால ஃப்ரெஞ்சு இலக்கியம், தத்துவம் முதலான கலைத் துறைகளில் மிகத் தரமான கல்விக்குப் புகழ் பெற்றுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இத்துறைகளில் மொத்தத்தில் 45 சதப் பேராசிரியர்கள் இன்றுள்ளனர். ஆனால் அப்பாடங்களில் பயிலும் மாணவர்களோ வெறும் 15 சதம்தான்.
மாணவர்கள் மத்தியில் வரவேற்கப்படும் முதல் ஐந்து துறைகளில் ஒன்றுகூடக் கலைத் துறைப் பாடமில்லை. மிக அதிகமாக விரும்பப்படும் பாடம் கம்ப்யூடர் சயின்ஸ். அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் இதுதான் நிலை. பென்சில்வேனியாவில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகம், போதிய மாணவர் சேர்க்கை இல்லை என்பதற்காக ஜெர்மன் மொழி, தத்துவம் மற்றும் உலக மொழிகளும் பண்பாடுகளும் முதலான துறைகளில் பட்ட வகுப்புகளை மூடுவதாகச் சமீபத்தில் அறிவித்துள்ளது.
ப்ரின்ஸ்டன், ஸ்டான்ஃபோர்ட் முதலான பல்கலைக்கழகங்கள், கலைத்துறைப் பாடங்களில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காகப் பள்ளி மாணவர்களுக்குக் கோடைகாலப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.
கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், மேலாண்மை முதலான துறைகளில் பட்டங்கள் இருந்தால்தான் வேலை வாய்ப்பு என்கிற கருத்து பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் இன்று வலுவாக உள்ளது. இயற்பியல், வேதியல், உயிரியல் முதலான அடிப்படை அறிவியல்களிலும் கூட இன்று நாட்டமில்லை. எலக்ட்ரானிக்ஸ், உயிர் வேதியல் முதலான பிரயோக அறிவியல்களுக்குத்தான் (applied sciences) இன்று மவுசு.
இந்தியச் சூழலில் 1980களில் உயர் கல்வி பெரிய அளவில் வணிகமயப் படுத்தப்படுவது தொடங்கியது. அப்போது தமிழகத்திலிருந்த அரசு கலைக் கல்லூரிகள் எழுபதுக்குள் இருக்கும். அதே அளவு அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இருந்தன. இங்கெல்லாம் அடிப்படை அறிவியல் பாடங்கள், வரலாறு, ஆங்கில, தமிழ் இலக்கியங்கள், பொருளாதாரம், தத்துவம் வணிகவியல் முதலான பாடங்களில் பட்ட, பட்ட மேற்படிப்புகள் இருந்தன.
இன்று அரசு, மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் நானூறுக்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் கலைத் துறைப் பாடங்கள் கிடையாது. பலவற்றில் அடிப்படை அறிவியலும்கூடக் கிடையாது. பிரயோக அறிவியல்களே உண்டு.
எண்பதுகளின் பிற்பகுதியில் அரசு கல்லூரிகளிலும் கலைத்துறைப் பாடங்களை மூடுவது என்கிற நிலையை தமிழக அரசு எடுத்தது. ஆசிரியர் சங்கத்தின் ஊடாக இம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினோம். 1987இல் மாநிலக் கல்லூரியில் கலைத்துறைப் பாடங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு கருத்தரங்கை நடத்தியது நினைவுக்கு வருகிறது.
கலை இலக்கியக் கல்வி சமூகத்திற்குத் தேவை இல்லை என்கிற நிலை உள்ளபோது ஏன் அதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்பதுதான் அரசும் கல்வி நிறுவனங்களும் கேட்கிற கேள்வி. கலை இலக்கியத் துறைப் பாடங்களை வற்புறுத்துவோர் இரண்டு விதமான பதில்களை முன்வைக்கின்றனர். உலக மயச் சூழலில் பிற நாட்டு மொழி, பண்பாடு முதலியவற்றை அறிந்துகொள்ளும் அவசியம் முன்பைவிட அதிகமாகியுள்ளது என்பது ஒன்று. இஸ்லாமியத் தீவிரவாதம் எனச் சொல்லாடி ஈராக் மீது அமெரிக்கா படை எடுக்கு முன் இஸ்லாம் மதத்தைப் புரிந்துகொள்வதற்காக அத்துறைப் பேராசிரியர் பெர்னார்ட் லூயிசை டிக் செனி சந்தித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.
மற்றது, கலை இலக்கியங்கள்தான் மனிதனிடம் மனிதாயப் பண்புகளை உயிர்க்கும் வல்லமை வாய்ந்தவை. கல்வியின் பணி சிறப்புப் பயிற்சியாளர்களை உருவாக்குவது அல்ல. முழுமையான மனிதனை உருவாக்குவது. தத்துவம் எல்லா அறிவியல்களுக்கும் தாய்.
இது பின் நவீன யுகம். முழுமையான மனிதன் என்பதெல்லாம் இதன் ‘அஜென்டா’வில் இல்லை. சோவியத் ரஷ்யாவில் சுமார் இருபதாண்டு காலம் கல்வித் துறைக்குப் பொறுபேற்றிருந்த லூனாசார்ஸ்கி, “அதீத சிறப்புப் பயிற்சி மனிதரை முடமாக்கும்” என்று கண்டித்ததெல்லாம் அந்தக் காலம். புதிய கல்விக் கொள்கைகளை அம்பானியும் பிர்லாவும் இயற்றும் காலம் இது. இன்றைய உலகின் தேவை ‘ரோபோ’க்களைப் போல இயங்கும் சிறப்புப் பணியாளர்கள்தான்.
எனினும் மனிதர்கள் எல்லோரையும் ரோபோக்களாகப் பார்க்கும் கார்ப்பரேட் மனநிலையை எதிர்ப்பவர்கள் கலைத்துறைப் பாடங்களின் முக்கியத்துவத்தை வற்புறுத்தவே செய்கின்றனர், கலை இலக்கியத் துறைப் பயிற்சி என்பது மனித நாகரிகங்களின் பிரிக்க இயலாத அம்சமாக இருந்துவந்துள்ளது. பல்கலைக்கழகங்கள் இப்பயிற்சியையும் இத்துறைகளில் அறிவுருவாக்கத்தையும் ஜனநாயகப்படுத்தின. கலை இலக்கிய ஆய்வுகளும் ரசனைகளும் சமூகத்தின் மேல் தட்டினரின் தனிச் சொத்தாக இருந்த நிலை போய் அடித்தள மக்களும் அவற்றை உரிமை கொள்ளக்கூடிய நிலை பல்கலக்கழகங்களினூடாகத்தான் வந்தது. இன்றும்கூட நம் இலக்கிய மேட்டிமைச் சக்திகள் பல்கலைக்கழக இலக்கிய ஆசிரியர்கள் மீது காழ்ப்பைக் கொட்டுவதை நாம் கவனிக்க இயலும்.
சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழகப் பல்கலைக் கழகங்களில் அறிவியலை முக்கிய பாடமாக எடுக்கிறவர்கள் ஏதேனும் ஒரு கலைப் பாடத்தைக் கட்டாய மைனர் பாடமாகத் தேர்வுசெய்ய வேண்டும். அந்த நிலை மீண்டும் வந்தால் நல்லது. பட்டப்படிப்பில் பார்ட் ஒன், பார்ட் டூ ஆகியவற்றில் உள்ள மொழிப் பாடங்களில் மீண்டும் இலக்கியங்களின் பங்கு அதிகமாக்கப்பட வேண்டும்.
கலை இலக்கியப் பயிற்சியுடைய எல்லோரும் எல்லா அம்சங்களிலும் மனித நேயமுடையவர்களாக இருப்பார்கள் என்பதல்ல. தனது பணியாளர்களைக் கொடுமையாகச் சுரண்டும் பல முதலாளிகள், பண்ணையார்கள், ஏன் பாசிஸ்டுகளும்கூட இலக்கிய ஆர்வலர்களாக இருந்துள்ளனர். மிகப் பெரிய அறிவுக் கருவூலம் ஒன்றை உருவாக்கியிருந்த தஞ்சை சரபோஜி மன்னருக்கு 18 மனைவியர், 98 ஆசை நாயகிகள் இருந்தனர் என்று சொல்வார்கள்.
கலை, இலக்கியத் துறைப் பாடங்களின் முக்கியத்துவம் என்பது, அவற்றின் மூலமாகத்தான் இன்னும் திறமையான நிர்வாகிகள் நமக்குக் கிடைப்பார்கள் என்பதல்ல. மாறாக வாழ்வை இன்னும் அதிகமாக நேசிக்கவும் பொறுத்துக்கொள்ளவும் அது நமக்கு உதவும். கலைத் துறைப் பாடங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு கட்டுரையின் கீழ் ஒருவர் இப்படிப் பின்னூட்டம் இட்டிருந்தார். “நான் ஸ்டான்ஃபோர்டில் தத்துவம் பயின்றேன். .டெம்னீஷியா நோயில் என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக இறந்தபோது அவளுக்குத் துணையாய் இருக்கவும், அதன் பின் அவள் பிரிவை நான் தாங்கிக்கொள்ளவும் அன்று படித்த கலைத்துறைப் பாடங்கள்தான் கைகொடுத்தன.”
பேராசிரியர் ஆடம் கோப்னிக் கூறுவது போல, “மனிதாயநிலைக் கல்வித் துறைகள் ஏன் நமக்கு அவசியம் என்பதற்கான காரணம் நாம் மனிதர்களாக இருக்கிறோம் என்பதுதான்.”
No comments:
Post a Comment