Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 26 October 2013

ஆராய்ச்சியை விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற ஆந்த்ரோபாலஜி

ஆந்த்ரோபாலஜி என்பது தமிழில் மானிடவியல் படிப்பு என்று அழைக்கப்படுகிறது. மனிதனின் பல நிலைப் பரிணாம வளர்ச்சி, மேம்பாடு, கலாச்சார மாறுபாடு போன்றவற்றின் நிலைகளை ஆராய்ந்து, வரையறுப்பதே இப்படிப்பின் அடிப்படையாகும். மனித இனம் தோன்றியது முதல், தற்போதுள்ள மனிதன் அடைந்துள்ள மாற்றங்களை சமூக ரீதியாகவும், உடற் கூறு ரீதியாகவும் ஆராய்ந்து அறிந்து கொள்வதில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இது நல்ல படிப்பாகும். இதில் பல பிரிவுகள் உள்ளன. சமூக - கலாச்சார மானுடவியல், வரலாற்று மானுடவியல், உயிரியல் மானுடவியல், துணைநிலை மானுடவியல், மொழியியல் மானுடவியல் என பல்வேறு கோணங்களில் மானுடவியலை ஆராய்வது குறித்து கற்பித்தலே ஆந்த்ரோபாலஜி படிப்பாகும்.
சமூக கலாச்சார மானுடவியல்
மனிதன் வாழ்ந்த முறை, கூட்டாக வசித்தது, தனித்து வசித்தது, குடும்ப முறைக்கு மாறியது போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த சமூக கலாச்சார மானுடவியல் படிப்பில் கற்பிக்கப்படுகிறது. இது பற்றி ஆராய்வதே இப்படிப்பின் தனித்துவம்.
வரலாற்று மானுடவியல்
கல்வெட்டுக்கள், புராதானச் சின்னங்கள், கோயில், அரண்மனைகள் போன்றவற்றை ஆராய்ந்து, வரலாறுகள் பற்றிய உண்மைகளைக் கண்டறியும் பிரிவாகும் இது. பொதுவாக வரலாற்றை விரும்பி பயிலும் மாணவர்கள், உயர் கல்வியில், ஆந்த்ரோபாலஜி படிப்பை தேர்வு செய்யலாம்.
உயிரியல் மானுடவியல்
மனிதன் தோன்றிய காலத்தில் அவனது உடல் இயக்கம் முதல், தற்போதைய மனித உடல் இயக்கத்தை தொடர்பு படுத்தி அதில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிந்து அந்த மாற்றங்கள் தோன்றியக் காரணம், மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதற்குக் காரணம், மனித உயிரியல் மாறுபாடு அடைந்த விதம் போன்றவற்றை ஆராய்வதே உயிரியல் மானுடவியல் எனப்படுகிறது.
மொழியியல் மானுடவியல்
ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அவை உண்டானதன் அடிப்படை, எழுத்துக்களின் வடிவம், மொழிகளில் ஏற்பட்ட மாறுபாடுகள், இரண்டு மொழிகள் இணைந்து புதிய மொழி உருவான விதம் போன்றவற்றை இப்பிரிவில் அறிந்து கொள்ளலாம்.
இது மருத்துவ மானுடவியல், தடயவியல் மானுடவியல், விஷூவல் மானுடவியல் என இன்னும் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.
வரலாறு, புவியியல் போன்ற பிரிவுகளில் ஆர்வமுள்ள மாணவர்களும், அறிவியல் பாடம் எடுத்து படித்து பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலையில் ஆந்த்ரோபாலஜி படிப்பை தேர்வு செய்வது அவர்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்கும். அந்த வகையில், அதிக பொறுமையும், ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். தாம் தேர்வு செய்யும் துறையில் உள்ள பல்வேறு தகவல்களை இப்படிப்பில் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். அதன் மூலம், தான் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது, அத்துறையில் விரிந்து பரந்த அறிவாற்றல் பெற வழி ஏற்படுகிறது. ஏற்கனவே உள்ள விஷயத்தோடு, இவர் ஆராய்ந்து அறிந்து கொண்டுள்ள புதிய விஷயத்தை ஒப்பிட்டு, அதனை மற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மனிதர்கள் வாழாத பகுதிகளிலும், அடிப்படை வசதிகள் அற்ற பகுதிகளிலும் ஆய்வுகளில் ஈடுபட, உடல் திறனோடு இருப்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமாகிறது.
ஆந்த்ரோபாலஜியில், இளநிலை பட்டப்படிப்பில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெறலாம். அதாவது பி.ஏ. ஆந்த்ரோபாலஜி அல்லது பி.எஸ்சி., ஆந்த்ரோபாலஜி, அதன் பிறக முதுநிலை பட்டப்படிப்பு முடித்து எம்.பில். படித்து பிறகு முனைவர் பட்டம் பெறலாம்.
இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்படிப்பு எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., பட்டப்படிப்புகளில் ஆந்த்ரோபாலஜி வழங்கப்படுகிறது.
மேலும்,
அமிதி இன்ஸ்டிடியூட் ஆப் ஆந்த்ரோபாலஜி
அமிதி பல்கலைக்கழகம்
ஆந்திரா யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் காமர்ஸ்
பங்கபாசி கல்லூரி, கொல்கட்டா
பிதான்நகர் கல்லூரி, கொல்கட்டா
பாஸ்டர் விஷ்வவித்யாலயா, சட்டீஸ்கர்
சிதம்பர் ஸ்கூல் ஆப் ஹியூமானிடீஸ் அன்ட் சோஷியல் சயின்ஸ், அலகாபாத்
காலேஜ் ஆப் ஹியூமானிடிஸ், சோஷியல் சயின்ஸ், ஆர்ட்ஸ் கல்சர், அலகாபாத்
டி.எம். காலேஜ் ஆப் சயின்ஸ், இம்பால்
தீன் தயால் உபாத்யாய் கேர்ல்ஸ் கவட் பி.ஜி. காலேஜ், லக்னோ
நார்த் குவகாத்தி கல்லூரி, கம்ரூப் மற்றும் குவகாத்தி
நார்த் லகிம்புர் கல்லூரி, அசாம்
பண்டிட் ரவிஷங்கர் சுக்லா பல்கலை, ராய்புர்
பஞ்சாப் பல்கலை, சண்டிகர்
பாட்னா பல்கலை, பாட்னா
பாண்டிச்சேரி பல்கலை, புதுச்சேரி
சம்பால்புர் பல்கலை, ஒடிசா
ஷைலாபாலா மகளிர் கல்லூரி, கட்டாக்
ஷிவாஜி பல்கலை, கோல்ஹாபுர்
ஸ்ரீ சைதன்ய கல்லூரி, கொல்கட்டா
தில்லி பல்கலைக்கழகம், தில்லி
அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்
கொல்கட்டா பல்கலை, கொல்கட்டா
லக்னோ பல்கலை, லக்னோ
மைசூர் பல்கலை, மைசூர்
ராஜஸ்தான் பல்கலை, ராய்புர்
உத்கல் பல்கலை, புவனேஸ்வர்
வித்யாசாகர் பல்கலை, மிட்னாபுர்
விஸ்வ பாரதி பல்கலை, மேற்கு வங்கம்
குருக்சேத்ரா பல்கலை, ஹரியானா
பெர்ஹாம்புர் பல்கலை, ஒடிசா
மணிப்பூர் பல்கலை, இம்பால்
சித்து கன்ஹூ பல்கலை, ஜார்க்கண்ட்
புனே பல்கலை, புனே
ஹைதராபாத் பல்கலை, ஹைதராபாத்
பெங்களூரு பல்கலை, பெங்களூரு
ஆந்த்ரோபாலஜி சர்வே ஆப் இந்தியாவின் பெல்லோஷிப்
ஆந்த்ரோபாலஜி படிப்பில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் ஆந்த்ரோபாலஜிகல் சர்வே ஆப் இந்தியா சார்பில் பெல்லோஷிப் வழங்கப்படுகிறது.  இந்த பெல்லோஷிப் மூலமாக ஒவ்வொரு ஆண்டும், இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள் என 40 பேர் ஆராய்ச்சிப் படிப்பை முடிக்கின்றனர்.
ஆந்த்ரோபாலஜி துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெல்லோஷிப் திட்டத்தில் மூத்த ஆராய்ச்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரமும், இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
முதுகலை பட்டம் பெற்றவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளராகவும், முதுகலை பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டவர்கள் மூத்த ஆராய்ச்சியாளராகவும் சேரலாம்.
இது மட்டும் அல்லாமல், பல்வேறு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஆந்த்ரோபாலஜி துறையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன.
பணி வாய்ப்புகள்
இந்தியாவில் ஆந்த்ரோபாலஜி படித்தவர்களுக்கு விரிந்து பரந்த வேலை வாய்ப்பு உள்ளது. லாப நோக்கற்ற அமைப்புகளில், ஆராய்ச்சி பணியில் சேரலாம். மேலும், உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ, யுனிசெப் போன்றவற்றிலும் இந்தியாவிலேயே வேலை வாய்ப்பைப் பெறலாம். இத்துறையில் ஆசிரியர், பேராசிரியராக பணியாற்றலாம். ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆராய்ச்சியாளராகலாம். இது மட்டுமல்லாமல், மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளில் ஆந்த்ரோபாலஜி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. சுகாதார திட்டம், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை செயல்படுத்துதால், சமூக ஆராய்ச்சி, பெரிய அளவில் திட்டப் பணிகளை செயல்படுத்தும் போது அதற்கான அறிக்கையை தயாரிப்பில் ஆந்த்ரோபாலஜி முடித்தவர்களின் தேவை அவசியமாகும். எனவே, மத்திய அரசிலும் வேலை வாய்ப்பைப் பெறலாம். வெளிநாடுகளில் இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது.

No comments: