குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வணிகவரித்துறை துணை ஆணையரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி குரூப் 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது. இதையடுத்து இந்த தேர்வினை தமிழ்நாடு தேர்வாணையக்குழு ரத்து செய்தது. இதுதொடர்பாக ஈரோடு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து பவானி வர்ணபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி தனபாக்கியம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பேராசிரியர் சுதாகர், பிரவுசிங் சென்டர் நடத்தி வந்த நாமக்கல்லை சேர்ந்த செல்வராஜ், சென்ன பெரும்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்ராஜ், திருவண்ணாமலையில் வசித்து வந்த ஸ்ரீதர்ராஜின் தம்பி செந்தில்குமார், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தராவ் ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸ் காவலில் எடுத்து அவர்களை விசாரித்தபோது வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு கோவை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பலரை கைது செய்தனர்.இதில் 32-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சென்னை வணிகவரித்துறை துணை ஆணையர் ஞானசேகரன் (31) என்பவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்து ஈரோடு கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண்:3) சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை புதன்கிழமை விசாரித்த மாஜிஸ்திரேட் கவிதா, குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனை நவ.25-ம் தேதி வரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் ஞானசேகரனை அழைத்துக்கொண்டு கோவை சென்றனர்.
No comments:
Post a Comment