சென்னை: குரூப்-2 தேர்வு தேதியில் எந்த மாற்றமும் கிடையாது. திட்டமிட்டபடி, டிச., 1ல், முதல்நிலைத் தேர்வு நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா அறிவிப்பு: குரூப்-2 பிரிவில் 1,064 பணியிடங்களை நிரப்ப டிச., 1ல், முதல்நிலைத் தேர்வு நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதே நாளில் வேறு சில தேர்வுகள் நடப்பதால் குருப்-2 தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
இதை தேர்வாணையம் ஆய்வு செய்தது. குரூப்-2 தேர்வுக்கு ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஏற்பாடு துரிதமாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வு வாரியங்களின் பல்வேறு தேர்வுகள் வருவதால் குரூப் -2 தேர்வை திட்டமிட்டபடி டிச., 1ல் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு, ஷோபனா தெரிவித்து உள்ளார்.
டிச.,1ல், யு.பி.எஸ்.சி., தேர்வுகள் ரயில்வே மற்றும் வங்கி போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. இதில் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களில் நான்கு பேர் யு.பி.எஸ்.சி., மெயின் தேர்வை (சிவில் சர்வீஸ்) எழுத இருப்பதை சுட்டிக்காட்டி அதற்கான ஆதாரங்களையும் டி.என்.பி.எஸ்.சி.,யிடம் காட்டியுள்ளனர்.
ஆனாலும் நான்கு பேருக்காக ஏழு லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வை தள்ளிவைக்க முடியாது என தேர்வாணையம் இந்த முடிவை எடுத்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment