Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 4 August 2013

2013-14 பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. 

தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், ஒற்றை சாரள முறையில், பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள், விருப்பப்பட்டு ஒப்படைக்கப்படும் இடங்களும், கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.

பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லூரி கல்வி இயக்ககம், நேற்று அறிவித்தது. படிப்பிற்கான விண்ணப்ப படிவம், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படும். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

சென்னையில், திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், விண்ணப்பங்களை பெறலாம். 

விண்ணப்ப கட்டணம், 300 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு, 175 ரூபாய். விண்ணப்ப கட்டணத்தை, பணமாகவோ, "டிடி&'யாகவோ செலுத்துவோர், "செயலர், தமிழ்நாடு பி.எட்., அட்மிஷன், சென்னை - 5" என்ற பெயரில், விண்ணப்பத்தை பெறலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், விண்ணப்பங்களை, ஜாதி சான்றிதழ் நகலை செலுத்தி, பெற்று கொள்ளலாம்.

மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை ஒழுங்குப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை போன்று, தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் ஒழுங்குபடுத்த, திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தனியார் பி.எட்., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அல்லது மூத்த கல்வியாளர் தலைமையில், குழு அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. 

இதன் மூலம், தனியார், பி.எட்., கல்லூரிகளில் விருப்பம் போல் மாணவர்களை சேர்ப்பதும், பி.எட்., படிக்க தகுதியில்லாத பட்ட படிப்பு அல்லது முதுகலைப் பட்ட படிப்பில், மாணவர்களை அட்மிஷன் செய்வதும், கட்டுப்படுத்தப்படும். கல்லூரிகளுக்கு செல்லாமலே, போலியாக வருகை பதிவு வழங்குப்படுவதற்கும், முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பி.எட்., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு, டி.இ.டி., தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பி.எட்., படிப்பில், புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், "கல்வியியல் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு" என்ற பாடத் திட்டமும், வரும் கல்வியாண்டு முதல், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்களின் திறனை மேம்படுத்த, செய்முறை தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறையிலும், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.