-முனைவர், பி.இரத்தின சபாபதி,
கடந்த
இரண்டு திங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப்
பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப்
பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான
பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும்
மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி 60% மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய
நிலை.
ஆசிரியர் தகுதித் தேர்வு
ஏன்? தகுதியான ஆசிரியர்களை அடையாளங் காணுவதற்காக என்று சொல்லப்படுகிறது.
அப்படியானால் இரண்டாண்டு, ஓராண்டு பாடத்திட்டம் வகுத்து மாநிலக் கல்வி
வாரியத்தாலும், பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்பட்ட ஆசிரியர் கல்விப்
பயிற்சி ஆசிரியர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க முடியவில்லை என்பதுதானே
பொருள்!
இவையெல்லாம்
தகுதிப்படுத்த முடியாத நிலையில் 150 வினாக்களைக் கொண்டு நடத்தப்படும்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டும் மிகுந்த வல்லமையுள்ளதா? இது
பொறுப்புள்ள கல்வியாளர் முன் நிற்கும் கேள்வி. "தாயை நீ தண்ணீர் கரையில்
பார்த்தால் மகளை வீட்டிலா பார்க்க வேண்டும்?' என்பது முதுமொழி. ஆசிரியர்
தகுதித் தேர்வின் "தகுதியினையும் பெருமையினையும்' ஏன் சிறப்பினையும்
தெரிந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் தந்துள்ள மாதிரி
வினாத்தாள்களே முதன்மையான சான்றுகள்.
மாதிரிகளாகக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டில் தாள் 1 பட்டயப் படிப்பு
ஆசிரியர்களுக்கு உரியது. பட்டப் படிப்பு ஆசிரியர்கள் இரு தாள்களையும்
எதிர்கொள்ளலாம். இரண்டு வினாத் தாள்களிலுமே தேர்வருக்கான தொடக்கநிலைக்
குறிப்புகள் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன. நாடெங்கும் ஆங்கில மோக அலை
வீசுகின்றபோது, அது வினாத்தாள் குறிப்புப் பகுதியிலும் இருக்கத்தான்
செய்யும். எனினும் வாழ்க்கைப் பணியைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்வுத் தாளை
எதிர்கொள்ளும் ஒருவருக்கு "எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலமா?' என்னும்
மலைப்புத் தோன்றாமலிருக்க முடியாது.
150 பலவுள் தெரிவு (Multiple choice) வினாக்களை
90 நிமிடத்தில் எழுதி முடிக்க என்ற குறிப்பு வினாத் தாள்களில்
காணப்படவில்லை. எனினும் தேர்வு தொடர்பான வினாக் குறிப்பில் தேர்வுக்கால
அளவு குறிக்கப்பட்டுள்ளது. தாள் ஒன்று, 23 பக்கங்களைக் கொண்டுள்ளது. தாள்
இரண்டு, 39 பக்ககங்கள் கொண்டுள்ளது.
இவற்றையெல்லாம்
புரட்டிப் பார்த்து 90 நிமிடங்களில் சராசரித் திறனுடையோர் விடையளிப்பது
இயலாதுதான். அடுத்து, வினாக்களின் தன்மைகளைப் பார்ப்போம். 150 வினாக்கள்
அனைத்தும் பலவுள் தெரிவு வினாக்கள், மத்திய அரசுப் பாடத்திட்ட, பள்ளி
ஆசிரியர் தகுதித் தேர்வினைப் போன்றே இத்தேர்வுகளும் 150 வினாக்களைக்
கொண்டுள்ளன. புறவய வினாக்களும் (Objective questions) பலவுள் தெரிவு வினாக்கள் உயர்நிலை ஏலுமைகளை (Higher order abilities) தேர்ந்தறிவதற்குப்
பொருத்தமானவை; தகுதியானவை. ஆசிரியர்கள் உயர் இயலுமை கொண்டவர்களாக எனத்
தேர்ந்தறிய பலவுள் தெரிவு வினாக்கள் கொண்ட தகுதித் தேர்வு
பொருத்தமுடையதுதான்.
ஆனால்
கொடுக்கப்பட்டுள்ள வினாத்தாள்கள் இரண்டிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு
சில வினாக்கள் தவிர பிறவெல்லாம் நினைவாற்றலையும் மனப்பாடத் திறனையும்
சோதிப்பதாகவே உள்ளன. ஆகவே தகுதித் தேர்வின் தாள் ஒன்றை எதிர் கொள்ளுபவர்
ஐந்து வகுப்புகளுக்காக கற்பித்தல் திறனைப் பொறுவதைவிட, அவ் வகுப்புகளுக்கு
அனைத்துப் பாட நூல்களிலுள்ள (கணிதம் தவிர) தகவல்களை நினைவில் வைத்திருக்க
வேண்டும். இவ்வாறு எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்? ஆங்கிலப்
பகுதியிலுள்ள வினாக்கள் இதற்கு விலக்காய், மொழித் திறனுக்கு முதன்மை
கொடுப்பதாகக் காணப்படுகின்றன. ஆனால் அவ்வினாக்கள் ஆங்கிலமே நமது வழியில்
குறுக்கிடக் கூடாது என்னும் உறுதியில் பி.லிட். பட்டம் மாணவர்கள் நெருங்க
முடியாதவாறு உள்ளன. தமிழ்நாட்டில் தமிழை விரும்பிப் படித்தவர்கள்
"பாவப்பட்டவர்கள்'.
தகவல்களை
மிகுதியாக நினைவில் வைத்துக் கொள்பவர்களுக்கு இத்தேர்வு
விரும்பத்தக்கதாய் இருக்கும். ஆனால் அறிவாற்றலை வெளிப்படுத்துவோருக்கு
அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது என்பதற்குப் பல வினாக்கள் சான்றுகளாகத்
திகழ்கின்றன. இதற்கான பல எடுத்துக் காட்டுகளை மாதிரி வினாக்களில் காண
முடியும். "ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுதல் (அ) யமகம், (ஆ)
சிலேடை, (இ) அந்தாதி, (ஈ) இரட்டுற மொழிதல்' இவ்வினாவில் ஆ,இ என்பன
இரண்டுமே பொருந்திய விடைகளுக்குரிய எழுத்துகள். இப்புறவய வினாவில் வினாப்
பண்பாகிய புறவயத்தன்மை இல்லை. "கற்றலின் முக்கிய காரணிகளுள் ஒன்று. (அ)
தக்க வைத்தல் (ஆ) நாட்டம் (இ) கவனித்தல் (ஈ) கவர்ச்சி' இவ்வினாவில் உள்ள
நான்கு தெரிவுகளுமே பொருத்தமான விடைகள்தாம். புறவய வினாக்களின் முக்கியப்
பண்பு ஏற்புமை. அது இவ்வினாவில் இல்லை.
"வெகுநாட்கள்
நமது நினைவில் நிற்பவை (அ) படித்துக் கற்றல் (ஆ) கேட்டுக் கற்றல் (இ)
புலன் வழிக் கற்றல் (ஈ) பார்த்துக் கற்றல்' இந்த வினா மிகவும்
வேடிக்கையானது.படித்தல் , கேட்டல் , பார்த்தல் என்பனவெல்லாம் புலன் சாராத
செயல்களா? மேலும் கற்றல் பாங்கு (Learning style) ஆளுக்கு ஆள் மாறும் என்பதை இவ்வினாத் தயாரித்தவர் அறியவில்லை. இவ்வினாவிலும் நான்கும் பொருந்திய விடைகளே.
ஆண்டுகளையும்
புள்ளி விவரங்களையும் கேட்டு மாணவர்களை அதிர வைப்பது சமூக அறிவியல்
ஆசிரியர் விருப்பம் போலும்! தாள் இரண்டில் உள்ள 60 சமூக அறிவியல்
வினாக்களில் 10 எண்களை நினைவில் வைத்து ஆண்டுகளையும் புள்ளி விவரங்களையும்
கொண்டனவாகும். மாதிரி வினாத் தாள்கள் மட்டுமல்ல, அவற்றுக்கு ஊற்றுக்
காலாய் அமையும் பாடநூல்களிலும் பன்முக நோக்கங்களை நிறைவு செய்ய வேண்டிய
பலவுள் தெரிவு வினாக்கள் பயனற்றதாகக் காணப்படுகின்றன.
வகுப்பிற்கேற்ற தரத்தையோ (Ability level), எந்த நோக்கத்துக்காகக் கேட்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தக்கதாகவோ (Validity), வினாவுக்கு விடையளித்த தேர்வர் பெற்ற மதிப்பெண்ணுக்கு அவர் தகுதியுடையவர் என உறுதிப்படுத்துவதாகவோ (Reliabilty) பாட
நூல்களில் பலவுள் தெரிவு வினாக்கள் இல்லை. கற்றல் பாடப் பொருளை
வழங்குவதில் நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ள வல்லமை, வினாக்களை
வடிவமைத்துக் கொடுப்பதில் காணப்படவில்லை.
இவ்வாறாக
குறைபாடுடைய மாதிரி வினாத்தாள்கள், பொருத்தமில்லாத வினாக்களைக் கொண்டுள்ள
பாடநூல்கள் இவற்றின் அடிப்படையில் பயிற்சிக் கையேடுகள், புற்றீசலாய்ப்
பெருகி வருகின்றன இப்போது. நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளின்
மாதிரி வினாத்தாள்களையும் பாடநூல்களையும் பகுத்தாய்ந்து காட்டப்பட்ட
பிறழ்வுகள் தவறுகளைச் சுட்ட வேண்டும் என்னும் நோக்கத்திலன்று. ஆசிரியர்
தகுதியைக் கண்டறிய தரமான வினாக்கள் தயாரிக்கப்பட வேண்டும்; தரமுடைய
ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
நன்றி : தினமணி
No comments:
Post a Comment