தமிழகத்தில், ராணி மேரி கல்லுாரி, பச்சையப்பா கல்லுாரி மற்றும் அமெரிக்கன் கல்லுாரி உள்ளிட்ட, நான்கு கல்லுாரிகளுக்கு, விரைவில் பாரம்பரிய கல்லுாரிக்கான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.
இந்தியாவில், 100 ஆண்டுகள் பழமையான கல்லுாரிகளுக்குப் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், 2013 முதல், பாரம்பரிய கல்லுாரிக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம்,சம்பந்தப்பட்ட கல்லுாரியின் பல மேம்பாட்டுப் பணிகளுக்கு, ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும்.
இந்த ஆண்டு, இந்த அந்தஸ்துக்கு, தமிழகத்தில் இருந்து, சென்னை - ராணிமேரி கல்லுாரி, பச்சையப்பா கல்லுாரி; மதுரை - அமெரிக்கன் கல்லுாரி; வேலுார் - ஊரீஸ் கல்லுாரி; திருச்சி - செயின்ட் ஜோசப் கல்லுாரி ஆகியவை உட்பட, நாடு முழுவதும், 190 கல்லுாரிகள் விண்ணப்பித்திருந்தன.
இவற்றைப் பரிசீலனை செய்த, யு.ஜி.சி., 19 கல்லுாரிகளுக்குப் பாரம்பரிய அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதில், தமிழகத்தில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியும் ஒன்று. தமிழகத்தில் மற்ற, நான்கு கல்லுாரி களுக்கும், நாக் எனப்படும் தேசிய தரநிர்ணய கவுன்சில் மூலம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல், நாக் அதிகாரிகள், இந்த நான்கு கல்லுாரிகளிலும் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் அடிப்படையில், விரைவில் பாரம்பரிய கல்லுாரி அந்தஸ்து கிடைக்கும் என, யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லுாரி கட்டடங்களை சீரமைக்க, பல்கலைக்கழக மானியக்குழு, 1.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
No comments:
Post a Comment