தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணி செயலர் வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி செயல்படும் பள்ளிகளில் இந்த சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்தப் பள்ளிகளில் ஆய்வு செய்ய மத்திய கல்வி வாரியமும் செல்வதில்லை. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடம் கேட்டபோது, தங்களுக்கு மெட்ரிக் பள்ளிகளை மட்டுமே ஆய்வு செய்யவும் விளக்கம் கேட்கவும் அதிகாரம் இருப்பதாகக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் மாநில அரசு நியமனம் செய்த சிங்காரவேலர் குழுதான் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஆனால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நழுவிக் கொள்கிறது.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ.பள்ளிகளிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்களை கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு முயற்சிக்க வேண்டும் என்று ஈஸ்வரன் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment