Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 5 July 2015

பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்த புதிய கட்டுப்பாடு

பி.எட்., கல்லுாரிகளில், இரண்டு ஆண்டுக்கான நடைமுறை வந்தால், பேராசிரியர் எண்ணிக்கையை, 16 ஆக அதிகரிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், பி.எட்., - எம்.எட்., மற்றும் பி.பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. 
இந்தப் படிப்பை, ஓர் ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டாக மாற்ற வேண்டும்; புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு தமிழக அரசும் அனுமதி கடிதம் அளித்துள்ளது. ஆனால், இதுகுறித்து நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்பின் படி, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், என்னென்ன வசதிகள் வேண்டும் என, தமிழகத்திலுள்ள அனைத்து பி.எட்., கல்லுாரி முதல்வர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, வடமாவட்ட கல்வியியல் கல்லுாரி முதல்வர்கள் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், வேலுார், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர். முதல்வர்களின் சந்தேகங்களுக்கு, கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் அளித்த பதில்:
புதிய விதிமுறைகள் வந்தால், புதிய, இரண்டாண்டு பாடத்திட்டம் அமலாகும். ஒவ்வொரு கல்லுாரியிலும், முதல் ஆண்டு மாணவர்களுக்கு, எட்டு ஆசிரியர்களும்; அடுத்த ஆண்டில் அவர்கள், இரண்டாம் ஆண்டுக்கு மாறும்போது, அதற்கு, எட்டு ஆசிரியர்களும் தேவை.
எனவே, அடுத்த ஆண்டு முதல், ஒரே நேரத்தில், இரண்டு ஆண்டுகளின் மாணவர்களுக்கு பாடம் எடுக்க, குறைந்த பட்சம், 16 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். கூடுதல் ஆசிரியர் நியமனத்தை, அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு முதல், இரு மடங்காகும் மாணவர்களுக்கு, கல்லுாரியில் கூடுதல் வகுப்பறைகள், விடுதி, ஆய்வக வசதிகள் இருக்க வேண்டும். இதற்கு, ஒவ்வொரு கல்லுாரியிலும், 26,800 சதுர அடி பரப்பளவாக, வகுப்பறை கட்டடத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அறிவுறுத்தினார்.

No comments: