Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 26 February 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது.

இந்தச் சான்றிதழ் மூலம் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வை 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறியது:
நிகழாண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் புகைப்படம், பதிவு எண், மதிப்பெண் விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஓரிரு தினங்களில் இந்தச் சான்றிதழை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களின் சான்றொப்பத்தை மாணவர்கள் பெற வேண்டும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மதிப்பெண் சான்றிதழைப் பிழையின்றி அச்சடிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என்றார் அவர்.
மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால், மாணவர்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்குப் பிறகே அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், திருத்தங்கள் அதிகமில்லாமல் சரியான தகவல்களுடன் மதிப்பெண் சான்றிதழைத் தர முடியும். தாற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் தகவல் பிழைகள் இருந்தால், அவற்றை அசல் மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புகாருக்கு இடமில்லாமல் நடத்த வேண்டும்: கூட்டத்தில், பொதுத் தேர்வுகளை எந்தவிதப் புகாருக்கும் இடமில்லாமல் நடத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்கூட்டியே சென்று தேர்வு ஏற்பாடுகளை மேற்பார்வையிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
வினாத்தாள் கட்டு காப்பு மையங்களுக்கான பாதுகாப்பு, வினாத்தாளை எடுத்துச் செல்லும் வழித்தடங்கள், விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள மையங்களுக்குக் கொண்டு செல்வது, பறக்கும் படைகளை அமைப்பது போன்றவை தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: