Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 18 January 2015

பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு: சிறிய அஞ்சல் நிலையங்களிலும் அறிமுகமாகிறது

பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய அஞ்சல்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக கிராமப்புற மற்றும் சிறு அஞ்சல் நிலையங்களிலும் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்திய அஞ்சல் துறை, கடிதப்போக்குவரத்து மட்டுமன்றி ஏராளமான வணிக ரீதியான சேவைகளையும் வழங்கி வருகிறது. இதனடிப்படையில் அஞ்சலக சேமிப்புத்திட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு நிறுவனம் வழங்கும் திட்டங்கள் என்பதால், இவற்றின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் நாடு முழுவதும் ஏராளமான பொது மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிதி சேவைகளில் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது பொது வருங்கால வைப்பு நிதியாகும். சேமிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத் திட்டத்தினை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வரிச்சலுகைகளும் உண்டு. இத்தகைய சாதக அம்சங்களை கொண்ட இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டுமே 1.5 லட்சம் கணக்குகள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 2300 கோடி ஆகும். இந்நிலையில் இந்த சேவையை பெற ஏராளமானவர்கள் கோரிக்கை விடுப்பதால், சிறிய மற்றும் கிராமப்புற அஞ்சல் நிலையங்களிலும், இது விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அஞ்சலகங்களில் வழங்கப்பட்டு வரும் சேவைகளில் மிகவும் பயனுள்ளது பொது வருங்கால வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்துக்கு வரிச்சலுகைகளும் உள்ளன. இதன் வட்டித்தொகை அதிகம் என்பதாலும் இந்த திட்டத்தின் கீழ் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த திட்டத்தில் சேர மேலும் ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த சேவை தலைமை அஞ்சல் நிலையங்கள், பிரிவு அலுவலகங்கள் போன்ற அதிகம் பேர் பணிபுரிகிற இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் மிகச்சிறிய ஊர்களில் உள்ள சிறிய அஞ்சல் நிலையங்களில் இச்சேவை பயன்பாட்டில் இல்லை.
ஆனால் அங்குள்ளவர்களும் இந்த சேவை வேண்டி கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், ஒரு அஞ்சல் அதிகாரி மற்றும் அஞ்சல் காரரை கொண்ட சிறு தபால் நிலையங்களிலும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக தற்போது சென்னை மண்டலத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் பரவலாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: