தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
இத்தேர்வில், எழுத்துத் தேர்வு முடிந்து அதில் தேர்வு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு என்பதால், அதிக ஆர்வம் இருக்கலாம். தவிரவும், ’அரைக்காசு என்றாலும் அரசு வேலை’ என்ற பழைய தமிழ் பழமொழி, எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் மனதில் நிலைத்து நிற்கிறது.
இத்தேர்வு முடிவுகள் இன்னும் மூன்று மாத கால அவகாசத்தில் வெளியாகும். வழக்கப்படி உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் அடுத்த கட்டமாக அமையும். இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் உட்பட சில பதவிகள் கொண்ட இந்த குரூப் - 4 பணியாளர்களுக்கு, மாதச் சம்பளம் முதலில், 17 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பணியும் நிரந்தரமாகும்.
இத்தேர்வுக்கு, கல்வி அடிப்படை வரம்பு 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. ஆகவே, பட்டதாரிகள், மற்ற தொழிற்கல்வி, கணினி கல்வி படித்த பட்டதாரிகள், அரசு வேலை என்பதால் ஆர்வமாக முயற்சித்திருக்கலாம். இத்தேர்வில், பெண்கள் ஆர்வமாக பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
இனி, விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயிரக்கணக்கானோர், கூடுதல் சதவீத மதிப்பெண் பெற்றோர் வரிசையில் இடம்பெற்று, கடைசி கட்ட பணியாளர் தேர்வு பரபரப்பாக அமையும். இன்று, அரசு நிர்வாக நடைமுறைகள் அதிகமாக மாறி, பணியாளர்கள் தங்களது பணியில் புதிய நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டிய நிலை உருவாகி வருகிறது.
குறிப்பாக, உயர்மட்ட மேலதிகாரிகள் அதிக அளவில் பணி நேரத்தை செலவழித்து, கோப்புகளை முடிக்க வேண்டிய கட்டாயம் அமலாகிறது. அந்த பாதிப்பு, இவர்கள் மீது அதிகமாக இருக்கும். தமிழகத்தில் குரூப் - 4 பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் தேவை இருக்கிறது என்பதும், அதில் ஆர்வமாக பணியாற்ற, அதிக அளவு முதற்கட்ட தகுதியுள்ளவர்கள் உள்ளனர் என்பதையும் இத்தேர்வு காட்டுகிறது.
இத்தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் பலருக்கு இப்பணியில் கிடைக்கும் மாத சம்பளத்தைவிட, தற்போது அதிகமாக இருக்கலாம் அல்லது அடுத்த பதவி உயர்வு மூலம் அதிக வேலைவாய்ப்பை பெறலாம் என்ற கண்ணோட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம்.
மேலும், வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, முடிவின்றி பல ஆண்டுகள் காத்திருக்கும் நடைமுறை மாறி, எழுத்து தேர்வு, அதற்குப்பின் ஒளிவு மறைவற்ற நேரடித் தேர்வு, தகுதி அடிப்படையில் அரசு வேலை என்பது நல்ல அம்சமாகும். இத்தேர்வு முடிவுகளால், திறன்மிகுந்த பலர் அரசுப்பணியில் சேர்ந்தால், அரசு இயந்திரம் சற்று வேகமாக செயல்பட உதவிடும்.
No comments:
Post a Comment