தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்மூலம், கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதிய சுமார் 15 ஆயிரம் பேர் தங்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண் சான்றிதழ்களின் மூலம் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் பயின்ற நிறுவனங்களிலேயே பெற்றுக்கொண்டு, தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை அவர்கள் நேரிலேயே செலுத்தலாம்.
முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள் 2015-ஆம் ஆண்டில் தனித் தேர்வர்களாக எழுத ஜனவரி 19 முதல் 24 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment