Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 21 December 2014

இன்று குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்கென மாநிலம் முழுவதும் 244 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியில் வருகின்றன. இந்தத் தொகுதியில் 41,963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்குரிய அறிவிக்கை கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

244 இடங்களில் மையங்கள்: குரூப் 4 தேர்வுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், மாநிலத்தில் 244 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு மையம் என்ற அளவில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை போன்ற பெருநகரங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, சென்னை தெற்கு, வடக்கு, மத்தி என மூன்றாகப் பிரிக்கப்பட்டு தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச மதிப்பெண்கள்: குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களாக 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 200 கேள்விகள் கேட்கப்படும். அதாவது, பொதுஅறிவு, திறனறிவு பிரிவில் 100 கேள்விகளும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். இந்த 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தேர்வு நடைபெறுகிறது. ""தேர்வுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வுக்கூடங்களை எளிதாக அடையாளம் காண அதற்கான முகவரி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே விரிவாகவும், தெளிவாகவும் அச்சிடப்பட்டுள்ளன'' என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: