அரசு உதவி பெறும் கல்லூரிகளான கோவை சிபிஎம், ஈரோடு சிஎன்சி கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தக் கோரி அக்கல்லூரி மாணவ-மாணவி கள் சென்னையில் நேற்று டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை புதூரில் உள்ள சி.பி.முத்துசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்யப்படாததுடன் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நீக்க நிர்வாகத்தினர் முயற்சி செய்வதாக மாணவர்கள் புகார் கூறிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், மேற்கண்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை நேற்று காலை 11.30 மணியளவில் முற்றுகையிட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் அங்கு திரண்ட மாணவ-மாணவிகள் கல்லூரிச் சாலையில் ஊர்வலமாக வந்து டிபிஐ பிரதான நுழைவு வாயிலை வந்தடைந்தனர். அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகள் தரையில் உட்கார்ந்துகொண்டு கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்தும் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
அப்போது இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் பேசுகையில், “அரசு பாடப்பிரிவுகளை மூடிவிட்டு முற்றிலுமாக சுயநிதி கல்லூரியாக மாற்றும் உள்நோக்கத்துடன் கல்லூரி நிர்வாகத்தினர் செயல்படுகிறார்கள். அரசு தரப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்துவருகிறது. இந்த இரண்டு கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்தும் வரை எங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என்றார்.
இந்த முற்றுகை போராட்டத்தில், இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைத்தலைவர் பா.சரவணத் தமிழன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ப.ஆறுமுகம், வடசென்னை மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், ஈரோடு மாவட்டச் செயலாளர் கவுதமன், கோவை மாவட்ட துணைச் செயலாளர் உதயபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் நிருபன் சேகுவேரா, மஞ்சுளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment