கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களும் (தாள்-1), பட்டதாரி ஆசிரியர் களும் (தாள்-2) தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
தகுதிச் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்ததும் அந்த வசதி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
ஆனால், சில ஆசிரியர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்யத் தவறிவிட்டனர். தற்போது அவர்கள் தகுதிச் சான்றிதழ் கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அத்தகைய ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மூலமாக தகுதிச் சான்றிதழை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். தகுதித் தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment