"காலாண்டு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு விருதும், பாடவாரியாக சென்டம் மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்படும்" என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பிற்கு செப்.,17 முதல் 26 வரை, பிளஸ் 2விற்கு செப்.,15 முதல் 26 வரை காலாண்டு தேர்வு நடக்கிறது. அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, காலாண்டு தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, காலாண்டு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விருது மற்றும் ரொக்க பரிசும், பாடவாரியாக சென்டம் பெறும் மாணவர்களுக்கும், சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கும் ரொக்க பரிசும் வழங்கப்படும்.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது: காலாண்டு தேர்வுதானே என்ற எண்ணத்தில், பெரும்பாலான மாணவர்கள் இத்தேர்வுக்கு முழு முயற்சி எடுப்பதில்லை. மாணவர்களின் இந்த எண்ணத்தை மாற்றும் வகையில்தான் இந்த பரிசு மற்றும் விருது திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நுாறு சதவீதம் பெறும் அரசு பள்ளிகளும் கவுரவிக்கப்படும். அதன் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றுகளை, நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் போதும் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும், பிளஸ் 1க்கு செப்.,15ம், 6 முதல் 9ம் வகுப்பு வரை செப்.,17ம் காலாண்டு தேர்வு நடக்கிறது. சாதனை தேர்ச்சியை எட்டும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கும் பரிசு காத்திருக்கிறது. இத்திட்டம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே ஆக்கப்பூர்வமான போட்டியை உருவாக்கும் என்றார்.
No comments:
Post a Comment