அங்கீகாரம் பெற்ற பல்கலைகள் பட்டியலை, அரசு, அப்டேட் செய்யாததால், சுகாதாரத் துறையில், 200க்கும் மேலான ஆய்வக உதவியாளர்கள், தகுதி இருந்தும், ஐந்து ஆண்டுகளாக பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில், ஏராளமானோர் ஆய்வக மேற்பார்வையாளர், மருத்துவம் சாரா உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எம்.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி படித்தவர்கள், பயோ கெமிஸ்ட் உயிர் வேதியியலாளராக பதவி உயர்வு பெறுவர்.
தகுதியிருந்தும், அரசின் கவனக்குறைவால், ஐந்து ஆண்டுகளாக, 200க்கும் மேற்பட்டோர், பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரம் கிடைத்தும், 1991 முதல், மாநில அரசு பட்டியலை, அப்டேட் செய்யாததுதான் பிரச்னைக்கு காரணம் என, ஊழியர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு மருத்துவம் சாரா பட்டாதாரிகள் சங்க பொதுச் செயலர் சக்திவேலு கூறியதாவது: பல்கலை மானியக்குழு அங்கீகார பட்டியல், அவ்வப்போது மாநில அரசு பட்டியலில், அப்டேட் செய்யப்பட வேண்டும். ஆனால், 1991க்கு பின் அப்டேட் செய்யப்படவில்லை. அரசின் சில பல்கலைகள், வினாயகா மிஷன் உள்ளிட்ட பல நிகர்நிலை பல்கலையின் பெயர்களும், மாநில அரசின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இதனால், பட்டியலில் பெயர் இல்லை எனக் கூறி, பயோ கெமிஸ்ட் பதவி உயர்வுக்கு எங்களை சேர்க்க மறுத்து விட்டனர். ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். கோர்ட்டில் அனுமதி பெற்றும் கூட, அரசு கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில், பட்டியலை புதுப்பித்ததாக கூறும் அதிகாரிகள், எங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றார்.
சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமீபத்தில், பல்கலை மானிக்குழு அங்கீகாரம் அளித்தும், சேர்க்கப்படாமல் இருந்த பல்கலைகளின் பட்டியல், மாநில அரசின் பட்டியலில் சேர்த்து, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்கள் தீரும்" என்றார்.
No comments:
Post a Comment