அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை. பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பிலிருந்து பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் வரை இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். திறனறித் தேர்வின் அடிப்படையில் இந்த உதவித் தொகை பெற மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, கிஷோர் வைகியானிக் புரோஸ்தன் யோஜனா (கே.வி.பி.ஒய்.) என்ற கல்வி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) கல்வி நிறுவனத்தின் மூலம் இந்த உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த உதவித் தொகை பெற என்ன கல்வித் தகுதி தேவை?
எஸ்.ஏ. (SA) பிரிவின்கீழ் உதவித் தொகை பெற விரும்புபவர்கள், தற்போது (2014-15) பிளஸ் ஒன் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் இந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் சேர்த்து 80 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 2016-17ஆம் ஆண்டில் பி.எஸ்சி., பி.எஸ்., பி,ஸ்டாட்., பி.மேத்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். ஆகிய படிப்புகளில் ஏதாவது படிப்பில் சேர்ந்த பிறகுதான் இந்தக் கல்வி உதவித் தொகை கிடைக்கத் தொடங்கும். இதற்கிடைப்பட்ட ஓராண்டில் மண்டல, தேசிய அறிவியல் முகாமில் பங்கேற்க இந்த மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். அதற்கான போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் வழங்கப்படும்.
எஸ்எக்ஸ் (SX) பிரிவின்கீழ் உதவித் தொகை பெற விரும்புபவர்கள், 2014-15-ஆம் ஆண்டில் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்க வேண்டும். பிளஸ் டூ படித்து முடித்த பிறகு, அடிப்படை அறிவியல் பி.எஸ்சி., பி.எஸ்., போன்ற இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளிலோ அல்லது ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்பிலோ சேர ஆர்வத்துடன் இருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வில் இந்த மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை எடுத்துத் தேர்ச்சி பெற வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும். பத்தாம் வகுப்புத் தேர்வில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதியுள்ள பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
எஸ்.பி. (SB)பிரிவின்கீழ் உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் இந்த ஆண்டு பி.எஸ்சி., பி.எஸ்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். போன்ற அடிப்படை அறிவியல் பட்டப் படிப்புகளில் முதல் ஆண்டில் படித்து வர வேண்டும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
இந்த உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
SA,SX,SB பிரிவுகளின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தப்படும். வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். பல நகரங்களில் காகிதத்தில் எழுதும் தேர்வை எழுதலாம். பிளஸ் டூ பாட நிலையிலேயே கேள்விகள் இருக்கும். பாடங்கள் குறித்த புரிதல், அனலிட்டிக்கல் திறமை ஆகியவற்றை சோதனை செய்யும் வகையில் இத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித் தாள்கள் கே.வி.பி.ஒய். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் பார்த்து இத்தேர்வில் எப்படி கேள்விகள் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில், இந்தக் கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித் தொகை எவ்வளவு?
பிஎஸ்.சி., பி.எஸ்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பில் முதல் மூன்று ஆண்டுகள் வரை மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதர படிப்புச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். எம்.எஸ்சி., முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ்., படிப்புகளில் படிப்புகளில் நான்கு, ஐந்தாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன், இதரப் படிப்பு செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெறும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். கோடை காலப் பயிற்சியிலும் மாணவர்களின் திறமையும் கணக்கில் கொள்ளப்படும். அதன் அடிப்படையில்தான் இந்த உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த உதவித் தொகை பெற விரும்புபவர்கள் புராசசிங் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவிகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை கே.வி.பி.ஒய். இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்புபவர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலமோ அல்லது ஆன்லைன் மூலமோ விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித் தொகைத் திட்டம் குறித்த விரிவான தகவல்களை, கே.வி.பி.ஒய். இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
அறிவியல் பாடத்திலும் அறிவியல் துறை ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற இப்போதே விண்ணப்பிக்கலாம். அறிவியல் பட்ட வகுப்புகளில் முதல் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: www.kvpy.org.in
No comments:
Post a Comment