Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 17 July 2014

TNPSC: முடிவுகள் பட்டியல் 3 முறை வெளியீடு - அரசு தரப்பில் விளக்கம் கேட்க உத்தரவு

பொறியாளர்கள் நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒரு தேர்வுக்கு, அதன் முடிவுகள் அடங்கிய பட்டியலை மூன்று முறை வெளியிட்டு குளறுபடி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

முதுகுளத்தூர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., 2012 டிச., 24 ல் அறிவிப்பு வெளியிட்டது. அதில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையில் உதவி பொறியாளர்கள், தொழில் நுட்ப உதவி ஆய்வாளர், இளநிலை மின் ஆய்வாளர் உட்பட ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நேரடி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம், என குறிப்பிடப்பட்டது.
நான் பி.இ.,(சிவில்) படித்துள்ளேன். 2013 மார்ச் 2 ல் தேர்வு நடந்தது. அக்.,4 ல் தேர்வு முடிவு வெளியானதில், மொத்தம் 32 ஆயிரத்து 969 பேரில் 652 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின், அப்பட்டியலை டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது. 2014 ஜன., 30 ல் புதிய பட்டியல் வெளியானது.
இவ்விரு பட்டியல்களிலும் என் பெயர் இடம் பெற்றது. ஜூலை 7 ல் 554 பேரின் பதிவு எண்கள் அடங்கிய புதிய பட்டியல் வெளியிட்டனர். இதில், என் பெயர் இல்லை. ஏற்கனவே வெளியான இரு பட்டியல்களில் இல்லாத 11 பேரின் பெயர்கள், மூன்றாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் முறைகேடு நடந்துள்ளது.
ஜூலை 22, 25 மற்றும் 28 ல் நேர்காணல் நடக்கிறது. மூன்றாவது பட்டியல் அடிப்படையில் நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும். மூன்றாவது பட்டியலை ரத்து செய்ய வேண்டும். என் பெயரை பட்டியலில் சேர்த்து, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
புதுக்கோட்டை இளங்கோவனும் இதுபோல மனு செய்தார். நீதிபதி கே.கே.சசிதரன், "டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளரிடம் விளக்கம் பெற்று, ஜூலை 21 ல் தெரிவிக்க வேண்டும்,” என்றார்.

No comments: